மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான் – நாலடியார் 248

இன்னிசை வெண்பா

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான் 248

- அறிவுடைமை, நாலடியார்

பொருளுரை:

சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வோனும்,

தனது முன் நிலையையுங் குலையச் செய்து தன்னைக் கீழ்நிலைக்குத்
தாழ்த்திக் கொள்வோனும்,

தான் முன் நிறுத்திக்கொண்ட சிறந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த
நிலையில் தன்னை மேம்படுத்தி நிலை செய்து கொள்வோனும்,

தன்னை அனைவரினுந் தலைமையுடையோனாகச்
செய்து கொள்வோனும் தானேயாவன்.

கருத்து:

ஒருவனுக்குத் தன் அறிவு முயற்சியே எல்லாவற்றிற்குந் துணை.

விளக்கம்:

நிலையினும் என்னும் உம்மை உயர்வு, உயர்த்து வானுமென்னாது உயர்த்து நிறுப்பானுமென்றார். உயர்நிலையை வருவித்துக் கொள்ளுதலோடு அவ்வுயர் நிலையில் தன்னை வல்லமையாய் நிலைநிறுத்திக் கொள்வோனுமென்றற்கு; தன்னை என்பதை இதன்கண்ணும் ஒட்டிக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 4:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே