நீத்தொழிந்த ஆறைந்து அடக்கிப்பின் நிச்சயமே வாய்த்தமைந்த வாயில் – அறநெறிச்சாரம் 127

நேரிசை வெண்பா
(‘ய்’ இடையின ஆசு)

நீத்தொழிந்த ஆறைந்(து) அடக்கிப்*பின் நிச்சயமே
வா’ய்’த்தமைந்த வாயில்பெண் ஆனையுங்** - கூத்தற்கு
வாளேறோ டோசை விளைநிலம் இவ்வல்லாற்
கேளாய் உடன்வருவ(து) இல் 127

– அறநெறிச்சாரம்

*அடங்கியபின். **பெண்ணாளையும்

பொருளுரை:

நீந்துதற் தொழிலானது நீங்கிய வழியாக நிலை தலைகால் முதலிய ஐந்து உறுப்புக்களையும் இடருற்ற காலத்தே ஓட்டினுள் மறைத்துக் கொள்வதாகிய ஆமை பின்பு உறுதியாக பொருந்தி திருந்திய வாசலாகிய கடை பிடியும் சிவபெருமானுக்கு வாளாயுதம் எறிவதாலுண்டாகிய புண், ஒலிப்பதாகிய இயம், விளையுங் கழனியாகிய செய்(தலும்) ஆகிய இவ்விரண்டுமன்றி (வேறாக) உறவாய் மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது இல்லையாம்.

குறிப்பு:

''நிலையாமை கடைப்பிடியும், சிவபுண்ணியஞ் செய்தலுமாகிய இவ்விரண்டும் அன்றி, வேறாக உறவாய் மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது இல்லையாம்'' எனத்தடித்த எழுத்திலிட்ட மொழிகளைக் கூட்டிக் கருத்தினைக் காண்க. இவை குறிப்பால் பொருள்தரு மொழிகளாம். இவற்றை நன்னூல் சொல்லதிகாரம் பெயரியலில், ''ஒன்றொழி பொதுச்சொல்'' என்ற சூத்திரத்தாற் கொள்க.

மூலத்தின்கணுள்ள திருத்தங்களையும் அங்குள்ள விருத்தியுரையாற் காணலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-22, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே