நமுத்துகுமார் எனும் தோழனே

வரிகளுக்குள் வார்த்தையை நுழைத்து
அந்த வார்த்தைக்குள் வாழ்க்கையை நுழைக்கும்
செப்படி வித்தையை
சொல்லி கொடுத்துகொண்டே இருக்கின்றன
நீ விட்டு சென்ற படைப்புகள்

உன் எல்லா படைப்புகளிலும்
காதல் இருக்கும்
நட்பு இருக்கும்
பாசம் இருக்கும்
ஏக்கம் இருக்கும்
நகைசுவை இருக்கும்
சோகம் இருக்கும்
அதைவிட அனைத்திலும்
சிரித்தபடி அழுதபடி
நீயும் இருப்பாய்

சிலரின் அருமை
மறைவிற்கு பின் தான் தெரியும்
அது போலத்தான் உன் அருமை
எனக்கும்

உன் வீட்டை கடந்து மாடி படி யேறும்
நாட்களில் என்னையும் அறியாமல்
தேடும் என் கண்களுக்கும்

அடிக்கடி உன்னிடம்
பாடல் எழுத கற்று கொடுக்க சொல்லி
நச்சரிக்கும் என் தொலைபேசி அழைப்பிற்கும்
ஆறுதலாய் இருப்பது
உன் படைப்புகள் மட்டுமே

ஏதோ காரணங்களால்
என் வாழ்க்கையின் அவசர பயணங்களில்
விடுபட்டு போன
உன் அணிலாடும் முன்றில்
படைப்பை படித்து முடித்த
கனத்த மனதோடு
நடக்கையில்

என் அருகில் அமர்ந்து கொண்டு
சிரிக்கிறது உன் நினைவு

எல்லாவற்றையும் விட
உன் மகனுக்காய் எழுதிய
அந்த கடிதத்தின்

ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும்
ஏன் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும்
நாற்காலி போட்டு
உட்கார்ந்திருக்கிறது உன் அன்பு

ஆதவனுக்கான உன் கடிதத்தின்
ஏதோ ஒரு மூலைகளில்
அனைத்து தகப்பன்களும்
எப்போதும் வாழ்ந்து கொண்டே
இருப்பார்கள்

நீயும்
ஒரு தகப்பனாய்
ஒரு கவிஞனாய்
ஒரு உண்மையான ஜீவனாய்
எங்கள் நினைவுகளில்
வாழ்ந்து கொண்டேதான்
இருக்கிறாய்

உன் நினைவோடும்
நீண்ட பிரிவோடும்

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (12-Jul-22, 12:08 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே