சான்றவர் சொல்லார் பொருண்மேல் படாஅ விடுபாக்கு அறிந்து – நாலடியார் 255

நேரிசை வெண்பா

புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக்(கு) அறிந்து 255

- அறிவின்மை, நாலடியார்

பொருளுரை:

அறிவு நிரம்பாத கீழ்மக்களெல்லாரும் அவ்வாறே மெய்யறிவோடு பொருந்தாத புல்லறிவுக் கூட்டத்தவரான தாழ்ந்த புலவர் நடுவிற் புகுந்து தாம் தெளிவாகக் கல்லாத கருத்துக்களையெல்லாம் ஆரவாரமாக விரித்துரைப்பர்;

ஆனால், அறிவு நிரம்பிய பெருமக்களோ, தாம் கற்ற கருத்துக்களைப் பிறர் வினவினாலும் அந்நுண்பொருள்கள் மேல் அவரறிவு கூரிதாகச் செல்லமாட்டாமல் விட்டுப் போதல் தெரிந்து அவற்றைக் கூறாமல் அடக்கமாயிருப்பர்.

கருத்து:

அறிவின்மையுடையார் அறிவுடையாரைப் போல் அடக்கமாயிரார்.

விளக்கம்:

புலவரில் தாழ்தரமானவர், ஈண்டுப் ‘புல்லாப் புன்கோட்டிப் புலவர்' எனப்பட்டார். கடையெல்லாம் - கீழ்மக்களெல்லாரும்; 'படாவிடுபாகு' என்றமையான், பொருள் நுண்பொருளெனப் பெறப்பட்டுச் சான்றவர் தம் நுண்ணறிவைப் புலப்படுத்தா நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-22, 8:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே