தலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு – நாலடியார் 257

இன்னிசை வெண்பா

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு. 257

- நாலடியார்

பொருளுரை:

நன்மை அறியாத கீழ்மக்கட்கு அறமுறைமை அறிவுரைக்கும் செயலானது பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறு பிழிந்தாற் போல் தகுதியற்றதாகும்;

அன்றியும், ஒரு மலைப்பாறையின் மேல் அறையப்படும் மரத்தாற் செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமை போல அவ்வறவுரையும் அவர் செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும்.

கருத்து:

அறிவில்லாதார் அறிவுரைகள் ஏற்று ஒழுகும் வாய்ப்பில்லாதவராவர்.

விளக்கம்:

தேமா, இன்சுவைமிக்க மாங்கனியின் வகை; முதலில் தகுதியில்லாமை கூறிப்பின் பயன்படாமையுங் கூறினார்.

குன்றின்மேலென்றது, கல்லிலென்னும் பொருட்டு,

தறி, துண்டாக நறுக்கியெடுக்கப்பட்ட முளைக்குச்சி,

அறச்சுவை அறியாது, மறச்சுவை பயின்றிருக்கும் மனத்தியல்பும், அறிவுரைகள் ஏலாது பாறைப்பட்டுக் கிடக்கும் செவிகளின் வன்மையும் ஈண்டு நன்கு விளக்கப்பட்டன.

குழிந்த இடம் பத்தரெனப்படுமாகலின்; ஈண்டுத் தொட்டிக்காயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-22, 9:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே