பெரியாரைத் தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல் திங்களை நாய்குரைத் தற்று - பழமொழி நானூறு 149

இன்னிசை வெண்பா

நெறியால் உணராது நீர்மையும் இன்றி
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத் தற்று. 149

- பழமொழி நானூறு

பொருளுரை:

அறிவிலார் அறிவுடையோர்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி தாழ்மையானவர் என்று நினைத்துத் தங்களுக்கு முன்பு அவர்களை இருக்கச் செய்து தகுதியல்லாத வார்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும்.

கருத்து:

சிறியோர்கள் பெரியோர்களைப் பார்த்து அடாதன கூறுதல் சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தாற் போலும்.

விளக்கம்:

பெரியார் பெருமை அவரை ஒப்போரால் அறியப்படுமன்றிச், சிறியோரால் அறியப்படமாட்டாது. அறிவிற் சிறியோராதலின் அவர் பெருமையை அறியும் தகுதியும் இலதாயிற்று. திங்களை நோக்கிக் குரைக்கும் நாய்க்கே ஊறுபாடுண்டாதல் போல, அறிவிலார்க்கே துன்பம் உண்டாம், பெரியோர்க்கு ஊறுபாடு இல்லையாதலோடு இதனை அவர் பொருட்படுத்தவும் மாட்டார்.

'திங்களை நாய் குரைத் தற்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-22, 9:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 119

சிறந்த கட்டுரைகள்

மேலே