நன்றறியார் மூத்தாலும் மூவார்நூல் தேற்றாதார் - சிறுபஞ்ச மூலம் 22

இன்னிசை வெண்பா

பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார்
மூத்தாலும் மூவார்நூல் தேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்(கு)
உரைத்தாலுஞ் செல்லா(து) உணர்வு 22

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பூத்திருந்தனவாயினும் காய்க்காத மரங்களும் உண்டு, (அதுபோல) நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும் அறிவினால் முதிரார், அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் அத்தன்மையரேயாவர்; பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்துமுண்டு, அது போல, அறிவில்லாதவனுக்கு நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது;

பொழிப்புரை:

பூத்தாலுங் காயாத பாதிரி முதலாயின மரங்களுள, நன்மையை யறியாதார் ஆண்டுகளான் மூத்தாராயினும் மூவாதாரோடு ஒப்பர், நூல் தேற்றாதாரும் அப்பெற்றியர், பாத்தியின்கட் புதைத்தாலும் முளையாத வித்துள, பேதையாயினார்க்குப் பிறருரைத்தாலும் உணர்வு புகாது.

கருத்துரை:

பூத்தாலுங் காயா மரம் போன்றவர் ஆண்டு முதிர்ந்ததும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது:

நாறல் – முளைத்தல்; நூலுணர்ச்சி பகுத்தறிவு வளர்ச்சிக்குத் துணையாவது; இதுவும் எடுத்துக் காட்டு உவமை அணியின் பாற்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jul-22, 8:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே