புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே – நாலடியார் 264

நேரிசை வெண்பா

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ(து) உடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து 264

- நன்னெறியில் செல்வம், நாலடியார்

பொருளுரை:

கடல் நாற்புறமுஞ் சூழ்ந்து பொருந்தியிருக்கும் உலகத்தில் நல்வினை என்பது தனி நிலைமை யுடையது;

ஏனென்றால், நல்லன உணர்ந்தொழுகுதலுடையார் வளமின்றியிருக்க, அவ்வுணர்வு ஒழுக்கமில்லாரான கறிமுள்ளியுங் கத்தரியும் போன்ற கீழோர் பட்டும் உயர்ந்த ஆடைகளும் உடுத்துக்கொண்டு வாழ்வுடையராய் இருக்கின்றனர்.

முள்ளி
1. Thorny plant;
முள்ளுள்ள செடி. (நன். 62, உரை.)
2. Indian nightshade, m.sh., Solanum indicum;
கத்தரிவகை
.
வழுதுணை
வழுதலை1 வழுதுணை 1. Brinjal.
See கத்தரி1. (பிங்.)
2. Indian night-shade, m. sh., Solanum indicum;
கண்டங்கத்தரி வகை.
வழுதலை 2 வழுது1+தலை.

கருத்து:

தக்க உணர்வில்லாதவர் நல்வினை வயத்தாற் செல்வமுடையவராயினும், அச்செல்வம் தக்கோராற் கண்ணியமாகக் கருதப்படாத நிலையினை யுடையது.

விளக்கம்:

புண்ணியத்துக்கும் அறிவொழுக்கங்கட்குந் தொடர்பில்லையென்பார், இவ் ‘வையத்துப் புண்ணியமோ வேறு' என்றார்.

வளக்குறைவால் ஆரவாரமின்றி யிருக்க வென்னும் பொருட்டு, ‘இருப்ப' என்றார்.

வட்டும் வழுதுணையுஞ் சிறுமை தோன்ற நின்றன.

முன் நல்வினையினாற் செல்வமுடையவர் ஆயினும் இப்பிறவியில் மதிக்கத்தக்க நற்சால்பு ஏதுமின்மையின், அச் செல்வம் நன்மை பயவாச் செல்வமாயிற்றென்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-22, 11:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே