நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க்கொன்று ஆகிய காரணம் – நாலடியார் 265

நேரிசை வெண்பா

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்(று) ஆகிய காரணம், - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில் 265

- நன்னெறியில் செல்வம், நாலடியார்

பொருளுரை:

வேற்படை போன்ற நீண்டகண்களையுடைய மாதே! உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமான மேலோர் உலகத்தில் வளமின்றியிருக்க, அவ்வினிமையுங் கல்வியறிவும் இல்லாக் கீழோர்க்கு ஒரு செல்வநிலை உண்டான காரணம் பழைய நல்வினையின் பயனேயல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை.

கருத்து:

நற்குண நற்செயல்கள் இல்லார் செல்வராயிருப்பினும், சான்றோர் அதனை முன்வினைப் பயனென்று கருதி மதியாது செல்வர்.

விளக்கம்:

தம் இயல்பில் நல்லர் ஆதலோடு பழகுதற்கும் இனியரென்றற்கு,நயவரென்றுங் கூறினார்;

ஒன்றென்று சுட்டாது சென்றார் அது மதிக்கப்படாமையின்;

ஆராய்ந்து காணத்தக்க அத்தனை பெரிய காரணம் யாதுமில்லையென்றற்கு, ‘நினைப்ப வருவதொன்றில்'என்று மேலும் விதந்துரைக்கப்பட்டது.

தொல்லைவினைப் பயனென்றது. காரணந் தெரிவித்தபடி, "தீதில் வினையினால் நந்துவர் மக்களும்" 1என்றார் பிறரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-22, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1169

சிறந்த கட்டுரைகள்

மேலே