நூலகம்

நூலெடுத்துப் படிப்பதற்கே தயங்கு கின்றார்
நூலகத்தின் உள்செல்லும் துடிப்பும் இல்லை !
நாளெல்லாம் செல்பேசி காதில் வைத்து
நீக்காமல் தொடர்கதைபோல் பேசு கின்றார்!
தோள்வலித்துப் போனாலும் விடுவ தில்லை
சுறுசுறுப்புக் குன்றாமல வம்ப ளப்பார்
நாளைவரும் வாழ்வினுக்குத் தீங்கு தரும்
நன்றல்ல என்றாலும் உணர மாட்டார்.

நூல்படிக்கும் பழக்கமது தொலைந்து போச்சு
நன்னெறிகள் எல்லாமும் மறந்து போச்சு !
பாழ்பட்டு வாழுகின்ற நிலையாய் ஆச்சு !
பிறந்தபயன் என்பதுவம் கனவாய் போச்சு !
தேள்கொட்டி துடித்திடுவார் நிலையாய் ஆச்சு
தேன்கூட்டில் கைவைக்கத் துயராய் போச்சு !
கூழ்குடித்து வாழுகின்ற வாழ்வின் போதும்
கருத்துடைய நூல்படித்து உயர்வீர் நன்று !

எப்போதும் செல்பேசி துணையாம் என்று
எண்ணுகின்ற எண்ணமதை விட்டு விட்டு
முப்பொழுதும் நூல்படிக்கும் பழக்கம் தன்னை
மூளையிலே ஏற்றிவிடு ! ஆற்றல் பொங்கும் !
தப்பாமல் உன்அறிவை வளர்த்து வைக்கும்
தரங்கெட்ட வாழ்வுதனை ஒதுக்கித் தள்ளும்
இப்போதே நூல்படிக்கும் பழக்கம் கொண்டால்
இறவாமல் காலமெல்லாம் நூல்கள் வாழும் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (12-Aug-22, 9:26 pm)
பார்வை : 67

மேலே