வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள்வே றாகி விடும் - பழமொழி நானூறு 162

இன்னிசை வெண்பா
(’ய்’ ஆசிடை யிட்ட எதுகை - வா’ய்’ப்பத்தான்)

கூஉய்க் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பத் துடைக்கிற்பார்
வா’ய்’ப்பத்தான் வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே றாகி விடும். 162

- பழமொழி நானூறு

பொருளுரை:

சிறந்த குதிரை பொருந்தத் தான் வாடிய காலத்தும் போருக்குரியவற்றை வைத்துக் கட்டவே வேறு குதிரை போன்று ஆண்மை கொண்டு நிற்கும்.

அது போல, வறியோரை அழைத்துக் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லை யாயினும், தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து அச்செயலில் அடிப்பட்டு வந்தவர்களே பிறருடைய துன்பத்தை நீக்க வல்லார்.

கருத்து:

வறுமை யுற்றவிடத்தும் ஈகையின் நீங்காதே.

விளக்கம்:

துன்பங்கள் எல்லாவற்றினும் பசித் துன்பமே மிகக் கொடிது என்று நூல்களுள் கூறப்படுதலின், இத் துன்பத்தை நீக்குபவரே துன்பத்தை நீக்குபவராவர்.

குதிரை வாடிய விடத்தும் போர்க்கலன் அணிந்தவுடனே முனைந்து நிற்றல் போல, வறுமையுற்ற பொழுதும் வேண்டினார்க்கு ஒரு பொருளை ஈதலில் முனைந்து நிற்க.

'வாடிய' என்றது உணவின்றி இரு மருங்கும் ஒன்றிய நிலையை.

'வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 8:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே