தோற்றம் பெரிய நசையினார் அந்நசை ஆற்றா தவரை அடைந்தொழுகல் - பழமொழி நானூறு 163

நேரிசை வெண்பா

தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை உண்கண் கனங்குழாய் அஃதால்
உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு. 163

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆற்றில் உள்ள மீனையொத்த மை உண்ட கண்களையும் பொற்குழையினையும் உடையாய்!

கணந்தோறும் அளவற்றுத் தோன்றும் மிகுதியான ஆசையினை உடையவர்கள் அவ் வாசையைத் தீர்க்க மாட்டாதவர்களை தீர்ப்பாரெனக் கருதி அடைந்து அவர்வழி நிற்றலாகிய செய்கை வண்டிக் கிடும் மசையினுள் குளிக்குமாற்றை யொக்கும்.

கருத்து:

குறை தீர விரும்புவார் அதனைத் தீர்க்கவல்லாரைச் சார்ந்தொழுகுக.

விளக்கம்:

'தோற்றம் பெரிய நசை' என்றது கணந்தோறும் அளவற்றுத் தோன்றும் ஆசையின் மிகுதியை.
உயவு நெய்யாவது, கற்றாழஞ் சாற்றில் வைக்கோல் கரியைச் சேர்த்துச் செய்யப்பட்டு வண்டியின் அச்சில் இடுவதொரு மசை;

உடல் தூய்மை செய்ய விரும்பினார், உயவு நெய்யுட் குளித்து மேலும் அழுக்கினைச் சேர்த்துக் கொள்ளுதல் போல, நசை பெரிதுடையார் ஆற்றாரை யடையின் தங்குறையை முடித்தலின்றி அவர் குறையை முடிக்க முந்தி நிற்க வேண்டும்.

'உயவு நெய்யுட் குளிக்குமாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-22, 9:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே