❤️மகள்❤️

கருவறையில் சூழ்கொண்ட நாள்முதல்
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
உன்வரவுக்காக காத்திருந்த நான்,
மகளாக நீஜனித்த நொடிமுதல்
தேவதையே யென்மடி சேர்ந்தமகிழ்வில்
உன்னழகில் மயங்கி மகிழ்ந்தேன்...

நொடியும் கண்சிமிட்டாது உன்
பரிணாம வளர்ச்சிக்கண்டு ரசித்தேன்.
வானவில்லே யென்மடி சேர்ந்தது
போலுனை எழில்கொஞ்சும் வண்ணங்களில் அலங்கரித்த

தருணங்கள் பற்பல...

கண்களுக்கு மையெழுதி முகம்
திருத்தி, பூமுடித்து, பொட்டிட்டு
நான்வளர்த்த என்தன் செல்வமகளை
கண்கவர் கணவனுக்கு மனமுடித்த
எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி

மணமுடித்து புதுமணம் மாறும்முன்
ஏறிய சரடிரக்கி வெற்றுக்கழுத்தும்
திலகம் தியாகித்த நெற்றியும்
மங்களம் தொலைத்த கைம்பெண்
கோலம் பூணும் அவலம்

கண்டு அவள் குடியிருந்தயென்
கருவறை தீயாய் தகிக்கின்றதே
தொட்டுத் தடவி சிருங்கரித்து
மகிழ்ந்த தாயின் இக்கண்கள்
இவ்வவலம்கண்டு காந்துவது தவறா?

இடையில் ஏற்பட்ட உறவால்
அளிக்கப்பெற்ற சரடு அல்லாது
பிறவிமுதல் என்னால் அளிக்கப்பட்ட
பூவும் பொட்டும் அவள்
தியாகிக்கும் கட்டாயம் ஏன்?

கணவனை இழந்த கைம்பெண்
வாழும் காலம்வரை பிறவியிலிருந்து
கைவரப்பெற்ற பூவையும் மொட்டையும்
அவன் அளித்த மங்களசரடுடன்
சேர்த்து துரந்துவாழும் அவலம்
நிறை வேறுமிவ் வுலகில்

மனைவியை இழந்த கணவனோ
மறு முகூர்த்தத்தில் மணமகனாகும்
கூத்தும் நடைபெறுவது எவ்வாறு
சரியாகும்?

எழுதியவர் : கவிபாரதீ (18-Aug-22, 6:47 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 56

மேலே