மறுமை யறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை – நாலடியார் 275

இன்னிசை வெண்பா

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர்
மறுமை யறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை 275

- ஈயாமை, நாலடியார்

பொருளுரை:

அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய பெரிய கடலை அடுத்திருந்தும் அதன் நீர் பயன்படாமையால் அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின் ஊற்றையே மக்கள் தேடிக் கண்டு உண்பர்;

ஆதலால் மறுமைப் பயனன் அறியாதொழுகும் புல்லியோர் செல்வத்தினும் குணம் நிறைந்த பெரியோரது மிக்க வறுமையே மேலானதாகும்.

கருத்து:

ஈயாதார் பெருஞ்செல்வராய் இருப்பினும் அவரால் நன்மையில்லை.

விளக்கம்:

சான்றோரது சிறிய உதவியும் சற்றும் தீங்கற்றதாய் இருமை நலங்களும் பயப்பிக்குமாகலின், தலையென்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-22, 10:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே