துயிலாத உணர்வுகள்

துயிலாத உணர்வுகள்
=======================
உள்ளமதில் தூங்குகின்ற ஓவியத்தைப் பாரினிலே
உணர்வுகளாய் இயற்கையுமே தீட்டும் தீட்டும்
வெள்ளமதில் வீழுகின்ற விதையாக வேரூன்றி
விளைகின்றப் பயிராகிக் காட்டும் காட்டும்
*
பள்ளமதில் வீழ்ந்தாலும் பாய்கின்ற உணர்வுகளைப்
பதுக்காமல் நதிகளுமே நீட்டும் நீட்டும்
முள்ளோடு பூத்தாலும் முறுவலிக்கும் மலர்களுமே
மூக்கினிலே நறுமணத்தை ஊட்டும் ஊட்டும்
*
கள்ளோடு நின்றாலும் காக்கைகளை என்றென்றும்
கருணையுடன் இளைப்பாற்றும் தென்னை தென்னை
எள்ளுகின்ற போதினிலும் ஏரோடு போராடும்
எருதுகளும் உணர்த்திடுமே தன்னை தன்னை
*
அள்ளுகின்ற மணலுக்காய் அகழ்வாரை இகழாத
ஆற்றுக்குக் கொடுத்தாலும் புண்ணை புண்ணை
தள்ளுகின்ற நீராலே தடுமாறும் வேர்களுக்கு
தாயாகிக் காத்திடுமே மண்ணை மண்ணை
*
கொள்ளையிட நாற்காலி கொண்டுறிஞ்சி நிற்போரின்
கொள்கையினைக் கண்டுணரும் நெஞ்சு நெஞ்சு
பிள்ளைகளின் எதிர்காலம் பிசகிடுமோ என்றுணர்வால்
பித்தாகி வருந்திடுமே அஞ்சி அஞ்சி
*
வள்ளலென இயற்கையுமே வழங்கிடவே எப்போதும்
வகுக்காது உணர்வுக்கு எல்லை எல்லை
துள்ளிவரும் துயர்பார்த்து துடிக்கின்ற உணர்வலைகள்
துயில்கொண்டு விடுவதுவும் இல்லை இல்லை
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Sep-22, 2:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 98

மேலே