தலையெல்லாம் சொற்பழி அஞ்சி விடும் – நாலடியார் 297

நேரிசை வெண்பா

கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும். 297

- மானம், நாலடியார்

பொருளுரை:

பக்கங்களில் தசை பருத்த வில் போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்ட கண்களமைந்த பெண்ணே!

மக்களிற் கடையானவர் எல்லாரும் தம்மை வருத்தும் வயிற்றுப் பசிக்கு அஞ்சி மானங் கைவிடுவர்;

இடைப்பட்டவர் எல்லாரும் தம் வாழ்க்கையில் வரும் உயிரிறுதி முதலிய துன்பங்களுக்கு அஞ்சி மானத்தை விட்டொழுகுவார்;

ஆனால் மற்றத் தலையானவர் எல்லாம் பழிச் சொற்களுக்கு அஞ்சி மானம் விடாது நடந்து கொள்வர்.

கருத்து:

பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற மானத்தோடு உயிர் வாழ்தலே தலைமக்களின் செயலாகும்.

விளக்கம்:

கடை இடை தலையென்பன மக்களைக் குறித்தன; பசி நீக்கமே நோக்கமாக உயிர் வாழ்வோர் கடையானவரெனவும், ஏனை வாழ்க்கை இன்பமே நோக்கமாக உயிர் வாழ்வோர் இடையானவரெனவும், மானங்காத்தலே நோக்கமாக உயிர்வாழ்வோர் தலையானவரெனவும் இச்செய்யுள் கூறிற்று;

மானமாவது பழிச்சொல் அஞ்சியொழுகுதல். சாதலின் இன்னாதது இல்லையாகலின், இன்னாமை உயிரிறுதியாகிய துன்பத்தையும் உணர்த்துதல் கண்டு கொள்ளப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 4:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே