செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ - பழமொழி நானூறு 188
இன்னிசை வெண்பா
இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு. 188
- பழமொழி நானூறு
பொருளுரை:
இம்மைக்கு வரும் பழியையும், மறுமைக்கு வரும் பாவத்தையும் தம்மினின்றும் நீக்காராய் மனக்கறுவு கொண்டு தம்மவராய் ஒட்டிவாழும் நட்பினரைவிட,
நேர்முகமாகப் பகை கொண்டு தன்னை ஒட்டி ஒழுகாதவர்கள் தீயவர்கள் ஆவரோ? பார்வையாகிய ஒளி மழுங்கிய கண்ணினும் பார்வையின்றி நிற்கும் கண்ணே நல்லது.
கருத்து:
உட்பகையுடைய நட்பினரை விடப் புறப்பகையுடைய பகைவரே சிறந்தவர்களாவர்.
விளக்கம்:
இம்மைப் பழியும் மறுமைப் பாவமும் பயக்குஞ் செயல்களை நீக்குதல் நட்பினர் கடமையாம். தங் கடமையினின்றும் அவர் நீங்குதலால் பழியும், பாவமும் விளைத்தவராவர்.
புறப்பகையுடையார் அவை செய்தற்கு இயலாமையின் நட்பினரை விடப் பகைவரே சிறந்தவர்களாவார்கள்.
மைப்பு என்பது ஒளியிழத்தலாம். மைநிறத்திற்காகிப் பார்வைக்காயிற்று.
'மைம்மைப்பின் நன்று குருடு' என்பது பழமொழி.