எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லாதிருப்பது நாண் – நாலடியார் 299
நேரிசை வெண்பா
நச்சியார்க்(கு) ஈயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; - எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண் 299
- மானம், நாலடியார்
பொருளுரை:
தம்மை விரும்பி வந்தடைந்தவர்க்கு ஒன்று உதவாமலிருப்பது நல்லியல்பு இல்லை; நாடோறும் தீயவை அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும் ஒரு நாண் அன்று;
தமது குலத்தில் தாம் வீரம் முதலியவற்றில் எளியராகித் தம் முன்னோர் ஆற்றிய அரிய செயல்களைத் தமக்கொரு பெருமையாகச் சொல்லிக் கொள்ளாதிருத்தலே மானிகட்கு மேலான நாணமாவதாகும்.
கருத்து:
தம் செயல்களால் தாம் பெருமை கொள்ளுதலே மானம் உள்ளவர்க்கு அழகு
விளக்கம்:
நாணம் – ஈண்டு நல்லியல்பாகக் கருதப்பட்டது;
நச்சியார்க்கு ஈயமாட்டாமை காரணமாக நாணுதலும் அச்சத்தால் நாணுதலும் உயர்ந்த நாணங்கள் ஆயினும் அவற்றினும் உயர்ந்ததொரு நாணத்தின் மேன்மை தேற்றும் பொருட்டு. அதனை நோக்க அவை நாண் அல்ல என்றார்;
எச்சம் என்றது, ஈண்டு வழிவழி மரபு; "வன்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கு "1என்றதிற் காண்க;
தாம் முயன்று தமது எளிமையை நீக்கிக் கொள்ளாமை மானமுடைய ஒருவற்கு மிக நாணத் தகுவதாகலின், இவ்வாறு கூறினார்.