வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் மழுங்க வரின் – நாலடியார் 300

நேரிசை வெண்பா

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின் 300

- மானம், நாலடியார்

பொருளுரை:

மதம் பொருந்திய யானையை அதன் வலிமையைத் தொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசிமிகுதியால் உயிர் துறக்குந் தறுவாயில் இருப்பினும், உண்ணாமல் உயிர்விடும்;

ஆதலால் செல்வப் பெருக்குடைய துறக்கவுலகம் தானே தம் கையகப்படினும் அது தமது மானம் கெட வருவதாயின் அதனைப் பெரியோர் விரும்பார்.

கருத்து:

மானத்தால் உண்டாகும் இன்பமே இன்பமாகும்

விளக்கம்:

‘இடமுடைய வானகம்' என்றவிடத்து இடம் என்றது வளம் உணர்த்தும்; "இடமில்லாக் காலும்"2 என்புழிப் போல. ஈண்டுப் போகம் உணர்த்திற்று. ‘கையுறின்' என்றது கிடைத்தாலும் என்னும் பொருட்டு;

‘மழுங்க' வென்னுங் குறிப்பாற், பெரியார்களுக்குள்ள மேன்மையெல்லாம் அவர்கள்பால் இம் மானம் என்னும் உயர் குணம் ஒன்று என்றும் பொன்றாது சுடர்விட்டுக் கொண்டிருப்பதுதான் என்பது பெறப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 6:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே