அம்மாவுடன் கல்லூரி முதல்நாள்

தேர்வு அழைப்பிற்காக முதல்முறையாய் அம்மாவுடன் நான் மதுரை சென்றநாள்.

வரமுனைப்பின்றி மகனுக்காய் சம்மதித்த அவள் முகம் இன்றும் என்னை வதைக்கிறது.

இருவேளை பேருந்துகட்டணம் மற்றும் மதிய உணவுக்காக இரண்டு நூறுரூபாய் நோட்டுக்களை சேர்க்க, முந்திய தினத்திலே கட்டடவேளையில் எத்தனை கற்களை சுமந்தாளோ.

அனைவர்மத்தியிலும் வந்துநிற்க அவள் தேடிய சேலையில் ஏதும்சிறப்பில்லை. முடிந்த பொங்கலுக்கு அரசாங்கம் தந்த இலவசம். மஞ்சள்கயிரு மட்டுமே அணிய கல்லூரி கட்டணம் காரணமாயிருந்தது.

வழிசொல்லவும் வாழ்த்துக்கள் சொல்லவும் எவருமில்லை எனக்கு,
அவள் பெருமிதம் தவிர.
நினைத்துக்கொண்டேன் நீ மட்டும் போதும் அம்மா என்று
இப்போதும்!

பத்தாம்வகுப்புதாண்டியதும்
பட்டாசுத்தொழில் வருமானத்திற்கு மகனைத்தயார் படுத்தும் பலரில், நான்மட்டும் படித்தே ஆகவேண்டும் என வைராக்கி்யம் கொண்ட வைரத்தாய் அவள்

பல்லாயிரம் தடைகள் வந்தபோதும் மகன் படித்தே ஆகவேண்டும் என வட்டிக்கு வட்டியுடன் அவளும் வாடிப்போன நாட்களிலே, கண்ணீரைத்தவிர வேறு சொந்தமில்லை எம்மிடம்!

இவன் என்ன விதிவிலக்கு என அவள் நினைத்திருந்தாள் என் கதி என்னவென்று என்னாலே நினைக்க இயலவில்லை.

என்னென்னவோ நினைப்பிற்கு மத்தியில் பேருந்து மதுரை வந்ததும் பயமின்றி துணைநின்று சேர்த்துமுடித்து வீடுதிரும்பினாள். செல்லும்போது என்ன சாப்பிட்டாளோ, இல்லை பட்டினியோடு சேர்ந்தாளோ தெரியாது.

அவள் சிந்திய துளி கண்ணீர் இன்னும் என்னில் காயவில்லை.

உயரங்கள் நான் தொட்டாலும் அவள் பட்ட துயரங்கள் என்னை துளையிட்டுக்கொண்டேதான் இருக்கும்.

துயர்கொண்ட நாட்களிலும் என்னில் துளியும் மகிழ்வுதொய்வின்றி தாங்கிப்பிடித்த தூயவள் என் தாயவள்.

வெறுத்துப்போன ஆண்மகன் வீணாவான், ஆனால்
பெண் வைராக்கியமாய் வளர்ந்துநிற்பாள்.
தாய்மை ஓர் புனிதம் !


-- அமரன்

எழுதியவர் : அமரன் (18-Oct-22, 9:44 am)
சேர்த்தது : அமரன்
பார்வை : 214

மேலே