நானே காரணம்

நானே காரணம்

நாங்கள் இருவரும் கணவன் மனைவியாய் இணைந்து குடும்பமாய் வாழலாம் என்று முடிவு செய்து விட்டோம். ஆனால் இருவரும் வாழ்வதற்கு நல்ல வீடு தேவை இல்லையா?
அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவனாகி விட்டேன். என்னை விட என் இணையானவளுக்கு அதில் மிகுந்த உற்சாகம். இருக்கத்தானே செய்யும். அதிக நேரம் அதில் இருப்பதும் அவள்தானே..!
நான் காலையில் எழுந்து இருவரின் உணவுக்காக வெளியே அலைந்து திரிபவன். இரவு தங்குவதற்கு வந்தால் போதும்.
இருவரும் நல்ல வீடு ஒன்றை தேடுவதை விட நாமே ஏன் உருவாக்கி கொள்ள கூடாது என்று அவள் யோசனை சொன்னாள். எனக்கும் ஆசை இருந்தது என்றாலும் அவசரத்திற்கு ஏதேனும் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
நாங்கள் இருவரும் பெரிய அளவில் உருவம் கொண்டவர்களல்ல, என்றாலும் எங்களுக்கென்று ஒரு இருப்பிடம் அவசியம்தானே.
யதேச்சையாய் அன்று ஒரு வீட்டை கண்டேன். வீடு பூட்டப்பட்டிருந்தது. இரண்டு மூன்று நாட்கள் வீட்டை கண்காணித்தேன்.யாரோ எங்களை போன்ற இளம் ஜோடிகள் மாலை வந்து தங்கி மறு நாள் காலை காரை எடுத்து கொண்டு வெளியே செல்வதை பார்த்தேன்.
எனக்கு அவர்களை பற்றிய அபிப்ராயம் ஒன்றும் இல்லை. இது போல் நிறைய வீடுகள் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்தேன். அவைகள் தேன் நிலவுக்காக இந்த மலைப்பிரதேசத்துக்கு வரும் ஜோடிகள், இங்கு கட்டணம் செலுத்தி விட்டு வந்து தங்கி செல்வதற்காக கட்டப்பட்டிருப்பதாக நான் அமர்ந்திருக்கும் இடத்துக்கு அருகில் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன்.
மெல்ல அந்த வீட்டை சுற்றி வந்தேன். எனக்கு சிரிப்பு வந்தது. முன்புறம் தாழிடப்பட்டு பூட்டப்பட்டிருந்தாலும் பின் புறம் ஒரு ஜன்னலை திறந்த வாக்கில் விட்டு சென்றிருந்தார்கள். வேண்டுமென்றே விட்டு சென்றார்களா? இல்லை மறந்து விட்டார்களா தெரியவில்லை.
அவளை அழைத்து வந்தேன். இந்த வீட்டில் நாம் வசித்தால் என்ன? அவள் முறைத்தாள். அதெப்படி இன்னொருத்தர் வீட்டில்?
கொஞ்ச நாள் மட்டும் வசிக்கலாம். இருபத்து நாலு மணி நேரமும் அவர்கள் இங்கு வசிக்கவில்லை. இரவு மட்டும்தான் வருகிறார்கள். நாம் இதோ இந்த அறைக்குள் வசித்து கொள்ளலாம்.
அவளுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் எனக்காக சம்மதித்தாள். இருந்தாலும் அவள் தங்குவதற்கு ஒரு சில வசதிகளை ஏற்படுத்தி தருவது என்னுடைய கடமை. அவளும் அந்த ஏற்பாட்டுக்கு தானும் உதவி செய்வதாக சொல்லி என்னுடன் வெளியே வந்தாள்.
இருவரும் அவர்கள் வருவதற்குள் அவசரமாய் எங்களுக்கென்று குடித்தனம் செய்ய அங்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொண்டோம்.
இரவு நீண்ட நேரம் ஆகியிருக்க வேண்டும். இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தோம். திடீரென்று ஒரு சத்தம்.சட்டென விழிப்பு வர எழுந்து கவனித்தேன்.
கதவை திறந்து இருவரும் உள் வருவதை கவனித்தேன். அதுவும் நாங்கள் இருந்த அறையை நோக்கி வருவது போல தோன்றியது,
நாம் இருப்பதை கவனித்து விடுவார்களோ? மனதுக்குள் பயம் வர விழித்து பார்த்து கொண்டிருந்தோம். அதற்குள்ளாகவே இருவருக்கும் ஏதோ சண்டை போலிருக்கிறது, ஒருவரை ஒருவர் வார்த்தையாடி நின்று கொண்டார்கள்.
இன்னும் இரண்டு நாள் இருக்காமுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறீங்க? அந்த பெண் அவனிடம் கோபமாய் சொல்வதும், அவன் புரிஞ்சுக்க, நாளைக்கு மறு நாள் டூட்டியில ஜாயிண்ட் பண்ண சொல்லி மெசேஜ் வந்திருச்சு, என்னை என்ன பண்ண சொல்றே.
அந்த பெண் கோப்மாய் சொன்னாள், நாம கல்யாணம் பண்ணி ஹனிமூனுக்கு போறோமுன்னு உங்க மானேஜருக்கு தெரியுமில்லை.
எல்லாம் தெரியும், ஆனா என் கூட இருக்கற ராஜேசுவோட அம்மாவுக்கு உட்மபு முடியாம ஊருக்கு போயிட்டானாம். நாளை மறு நாள் முக்கியமான ஆடிட்டிங் இருக்குது, இப்ப என்ன பண்ணதுன்னு தெரியலை, உடனே வந்தியின்னா நல்லா இருக்கும் அப்படீன்னு சொல்லிட்டாரு.
அந்த பெண் அவன் சொல்லும் எதையும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பதை அவள் செய்கை உணர்த்தியது. அது அவர்கள் படுக்கும் அறையாக இருக்க வேண்டும், அதற்குள் போனவள் தலையணை ஒன்றையும் கம்பளி ஒன்றையும் எடுத்து .
.ஐயோ நாங்கள் இருக்கும் அறையின் கதவை திறந்து விளக்கை கூட போடாமல் அப்படியே கம்பளியை கீழே போட்டு தலையணையை வைத்து படுத்து கொண்டாள்.
இருவரும் சத்தம் காட்டாமல் இருந்தாலும் நான் மெல்ல நகர்ந்து இறங்கி என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த வேளையில்..
சடாரென கதவை திறந்து அவள் கணவன் உள்ளே வந்து விட்டான். அவள் அருகே உட்கார்ந்து இங்க பாரு..ப்ளீஸ்..ஏதோ தோ சொல்லி சமாதானப்படுத்த.. அவள் ஊடலாய் திரும்பி படுத்து கொண்டாள்.
ஓ..! அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவளுக்கு குளிர் எடுத்தால் தானாக படுக்கை அறைக்குள் வந்து விடுவாள் என நினைத்தானோ என்னவோ, எழுந்து சுவற்றை தடவி ஏதோ சுவிட்சை தட்டிவிட்டான்.
அடுத்து நடந்த விபத்து என் கண் முன்னே..
அதுவரை அசையாமல் இருந்த காற்றாடி விர்ரென்று வேகமாய் சுழல ஆரம்பிக்க..
நான் ஐயோ என் மனைவி மேலே படுத்திருக்கிறாள் அவளுக்கு ஒன்றுமாகி விடக்கூடாதே என்று பெருங்குரலெடுத்து கீச்..கீச்..சென்று கத்தினேன்.
அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது, மேலே அடக்கமாய் படுத்திருந்த என் மனைவி வழுக்கி கீழே விழவும் காற்றாடியின் இறக்கை “சத்” தென்று ஒரு சீவு சீவுவதையும் என் காதுகள் கேட்டன..
அது வரை படுத்திருந்த அவன் மனைவி சட்டென எழுந்து பாவி மனுசா அந்த பேனை நிறுத்து, அங்க குருவி இருந்திருக்கு போல.. கத்தினாள்.
அந்த இளைஞம் பயந்து விறு விறுத்து, பேன் சுவிட்சை நிறுத்தி விட்டு விளக்கை போட அங்கே இரத்த வெள்ளமாய், இறக்கைகள் வெட்டப்பட்டு என் மனைவி..
அழுகை தாளாமல் நானே இவளை இங்கு கூட்டி வந்து கொன்று விட்டேனே, கதறியவாறு கீச் கீச் கீசென்று அழுது கொண்டு அவளை சுற்றி சுற்றி பறந்து வந்தேன்.
இரவு முழுக்க அவர்கள் தங்கள் சண்டையை மறந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த என் மனைவியை பிழைக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த பையன் தன் மனைவியிடம் சோகமாய் புலம்பி கொண்டிருந்தான். தப்பு பண்ணிட்டேன், பாவம் பேனை போடறதுக்கு முன்னாடி லைட்டை போட்டு பார்த்திருக்கலாம், அநியாயமா இதோட ஜோடியை கொன்னுட்டேன், பாவம் பாரு எப்படி சுத்தி சுத்தி வருதுன்னு என்னை பரிதாபமாய் பார்த்தான்.
மறு நாள் என் மனைவி புதைக்கப்பட்ட இடத்தை நான் சோகமாய் பார்த்தவாறு மரத்தின் மேல் அமர்ந்திருக்க, அந்த இளம் தம்பதிகள் என்னையும், அவர்கள் என் மனைவியை புதைத்து விட்டு சென்ற இடத்தையும், வருத்தத்துடன் பார்த்தவாறு அங்கிருந்து தங்களது உடமைகளுடன் காரை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Nov-22, 10:26 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : naaney kaaranam
பார்வை : 146

மேலே