சிக்கனம் சேமிப்பு---எண்சீர் விருத்தம்---

எண்சீர் விருத்தம் :

தேவையெது முன்னறியார் சிக்கனத்தின் வழிமறப்பார்
*****தேராழி அடியின்கீழ் நசுங்கிப் போவார்
பாவையென உணர்வற்றுப் பகட்டுக்கும் பயனிலாஅப்
*****பற்றுக்கும் முன்நிற்பார் இடும்பை சேர்ப்பார்
கோவைமலர் மாலைநிகர் கொள்கலன்சேர் காற்றுநிகர்
*****குடிகாக்க சேமிப்பார் நலத்தை ஏற்பார்
பூவையதன் உள்மதுவைப் பொழிற்தேனீ இழந்துவிடின்
*****புவிவாழ்வில் இன்பமில்லை அறிவாய் இன்றே (1)

தேடுபொருள் வந்துவிடின் திட்டமிட்டுச் செலவைச்செய்
*****சேமிக்கக் கற்றுக்கொள் வரும்நாள் வெல்வாய்
வீடுவரும் பொருள்தங்கா விருந்தினன்போல் மனைநீங்கின்
*****வெறுங்கையில் முகந்தாங்கி வருத்தம் கொள்வாய்
ஆடுகொடி கிளைநோக்கி ஆதரவைக் கேட்பதன்ன
*****அடுத்தவர்முன் மனங்குறுகி உதவி கேட்பாய்க்
காடுதரும் அடர்இருளைக் கதிர்நீக்கும் நிலைவேண்டின்
*****கைசேர்ந்த பொருள்சேர்ப்பாய்க் கடனைத் தீர்த்தே (2)

ஊண்மறுத்து நாட்கடப்பின் ஊன்மெலிந்து பிணிதொற்றி
*****உயிர்விலக விடைகேட்கும் நிலையைப் போல
வீண்செலவில் ஈடுபடும் வீடுநாடு வியனுலகும்
*****வீழ்ந்துமீள முடியாது முடங்கிப் போகும்
மாண்பிலாஅர் செய்முறையால் மண்தந்த வளமெல்லாம்
*****வருந்தலைக்குக் கிடைக்காது செலவு செய்தால்
தீண்டுமொரு பேரழிவு திரும்பாது பேரழகு
*****செல்வமதைச் சிக்கனம்செய் உறுதி ஏற்றே... (3)

(உ0/க0/உ0ருங)

எழுதியவர் : இதயம் விஜய் (6-Nov-22, 3:23 pm)
பார்வை : 694

மேலே