எதிர்ப்பார்ப்பு

எதிர்பார்ப்பு
*************
ஊணேற வேண்டுமெனில் உழைப்பதனைக் காட்டும்
ஊதியத்தில் மட்டுமது ஓரவஞ்ச மூட்டும்
வீணேறும் விலைவாசி வேதனையைக் கூட்டும்
வேதாளம் மீண்டுமேற வேமுருங்கை யாட்டம்
சாணேற முழஞ்சறுக்கச் சாகசங்கள் தீட்டும்
சாத்தானின் சேட்டைகள் சந்ததிக்கும் நீட்டும்
தூணேறி வழுக்குகின்ற தோராட்ட மாட்டுந்
தோரணையில் வாழ்வினையே தோய்த்தெடுத்து வாட்டும்
*
ஒன்றிருக்க ஒன்றுவந்து உபத்திரவ மூட்டும்
உத்தமமாய் வாழவெண்ணும் உயர்பண்பை யோட்டும்
நின்றிருக்கும் போதினிலே நேர்வழியை மாற்றும்
நினைப்பதெதும் நடக்காமல் நிம்மதியை வாட்டும்
வென்றுயரும் வழியெங்கும் விழுங்குழிகள் தோண்டும்
விதியென்றே சலிப்பதற்கு வெறுப்புணர்வை யூட்டும்
இன்றுள்ள நிலைமைக்கு எதிர்காலம் தூற்றும்
இன்னல்கள் தீராமல் இரவுபகல் வாட்டும்
*
நன்றிகெட்ட மாந்தரெலாம் நாயெனவே வாழ்வர்
நம்பிக்கைத் துரோகிகளோ நல்லவர்போல் சூழ்வர்
பன்றியுள்ளங் கொண்டவரோ பரிசுத்தம் ஆள்வர்
பரிசுத்த மானவரோ பரிதாபம் கொள்வர்
கன்றுறிஞ்சும் பால்விற்றுக் காசள்ளு வார்கள்
கௌரவத்தை விலைகொடுத்துக் கைவாங்கிச் செல்வர்
இன்றிருக்கும் சூழ்நிலையில் எதைக்கொள்வேன் வாழ்வில்
இருள்நீங்கி ஒளிகாண எதிர்பார்ப்பேன் வெய்யோன்
*
மெய்யன் நடராஜ்
28 - 11 - - 2022

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Nov-22, 1:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 116

மேலே