தேவை ஒரு தினம்

தேவை ஒரு தினம்
***************************
ஆண்டுக் கொருபொங்கல் ஆடுமாட்டுக் குண்டிங்கே
கூண்டுக்குள் வாழ்ந்திடுங் கோழிக்காய் - வேண்டியொரு
பண்டிகைக் கொண்டாடப் பாரினில் யாருளர்?
உண்பாரே சொல்வீர் உரத்து
*
கொல்வதற் கென்றே குறுநெல் தினமிடுவீர்
நல்ல ருசியென்றே நாக்கொழுவீர் - பல்சிக்கா
வண்ணம் பசிக்குண்ண வாட்டி வதைப்பீரே
எண்ணிவழி காண்பீர் இதற்கு
*
நகமும் சதையுமென நம்மோ டிருப்பர்
அகமும் புரமும் அழுக்கு - சுகமாய்
நமக்காய் உயிர்துறக்கும் நற்கோழி வர்க்கம்
தமக்கென வாழ்ந்துய்யா தாய்.
*
இயற்கை மரணமென்ப தின்றியே நித்தம்
செயற்கை மரணமே செய்வீர் - வியக்கும்
பெருநாள் பிரியாணிப் பின்னிருக்கும் கோழித்
திருநா ளெனவுண்டோ தேடு
*
காதல் தினமென்றும் கண்றாவி நாளென்றும்
மோதல் தினமென்றும் முட்டாள் தினமென்றும்
கொண்டாடும் பூமியிது கோழிக்கோர் நாள்தனைக்
கண்டிருந்தால் கண்காணக் காட்டு
*
தினசரி மாயும் திகிலோடு வாழ்வை
மனத்தொடு வைத்தே மருளும் - இனமாய்
சனங்கொன்று சாய்த்துண்ணும் சாப்பாட்டுக் கோழி
தினமொன்று தேவையே தான்.
*
மெய்யன் நடராஜ்
29 – 11 – 2022

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Nov-22, 1:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 134

மேலே