கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான் உற்றிடர்ப் பட்ட பொழுது - பழமொழி நானூறு 228

இன்னிசை வெண்பா

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
சுரையாழ் நரம்பறுத் தற்று. 228

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே!

நீதிநூல்களைக் கற்ற அமைச்சர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன் யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது தானே ஒருவகையாகத் துணிதல் ஒரு நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்.

கருத்து:

அமைச்சர்களின்றித் தானே ஒரு காரியத்தை அரசன் துணிந்தால்,அத்துணிவால் பயனுண்டாதல் இல்லை.

விளக்கம்:

ஒரு நரம்புடைய யாழின் அவ்வொரு நரம்பையும் அறுத்துவிட்டால் அவ்யாழ் பயன்படாது ஒழிதல் போல, அமைச்சர்களின்றி அரசன் துணியும் துணிவும் பயனற்று ஒழியுமென்பதாம்.

யாழ்வகையுள் ஒன்று ஒற்றை நரம்புடையது. பழைய பொழிப்புரை செங்கோட்டியாழ் என்று கூறுகின்றது. அடியார்க்கு நல்லார் உரை ஏழு நரம்புகளையுடையது செங்கோட்டியாழ் என்று கூறுகின்றது. ஆதலின் பழைய பொழிப்புரை கூறியது ஆராயத்தக்கது.

சுரை என்றது செருகும் சுரையாணியாம்.

'தேற்றம்' என்றால் ஆராய்ந்து முடிவு கூறுந்தன்மை அரசரிடத்தும் உளவாகலான். 'தானே சூழ வல்லனாயினும் அளவிறந்த தொழில்களால் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரானல்லது நடவாமை பற்றி அவரைக் கண்ணாகக் கூறினார்' என்று பிறரும் கூறியது காண்க.

'சுரையாழ் நரம்பறுத் தற்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-22, 11:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே