விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர் விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை – நாலடியார் 339

நேரிசை வெண்பா

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை, - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு 339

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

ஒருவர் தம்மை விரும்பி மதித்து அளவளாவ, ஒருவர். அவரை விரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும் இத்தகைய நுண்ணுணர்வில்லாப் பேதையரிடத்து உண்டாகுந் தொடர்பு, ஒலிக்குங் குரலோடு பாய்ந்திழியும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதொன்றன்று.

கருத்து:

பொருள் செய்ய வேண்டுவதைப் புறக்கணித்துக் கிடப்பது பேதைமையின் இயல்பு.

விளக்கம்:

வியப்ப வென்றது, வியந்து அளவளாவ என்க. ‘தம்முள் ஒருவர் விழைய ஒருவர் விழைந்திலேம் என்றிருக்கும் ஆய்நலமில்லாதார் மாட்டுக் கேண்மை இன்னாது' என்பது விழைவோரையும் ஆய்நலம் இல்லாதாரென்றது, அறியாது விழைதலின்.

ஆய்நலமாவது, ஈண்டு நுண்ணுணர்வு; பிறவி தொறும் இன்பம் பெருக்கும் அறவொளியைக் கெடுத்தலின் அவர் கேண்மை வையம் பயப்பினும் இன்னாதாயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-22, 3:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே