அறுசீரில் விருத்தம் வந்தால் இன்பந் தானே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
விருத்தமும் எழுதத் தானே
..விழைகிறேன் நானு மிங்கே!
கருத்ததும் சீரில் வைத்துக்
..கடவுளை இறைஞ்சு கின்றேன்!
உருவினில் காணாத் தெய்வம்
..உள்ளிருந் துதவ வேண்டும்!
கருவினில் உருவாய் வந்து
..காண்பது விருத்தந் தானே! 1
அறுசீரில் விருத்தம் வந்தால்
..ஆவதும் இன்பந் தானே!
நறுவிசாய்க் கருத்தைச் சொல்ல
..நானுமே விழைகின் றேனே!
உறுமருந் தாயுள் ளத்தில்
..உள்ளதெல் லாமுஞ் சொல்வேன்!
உறுமதன் நன்மை கண்டே
..ஓங்கிடும் இன்பம் அன்றோ! 2
கூவிளஞ் சீர்கள் வைத்தே
குறைவிலா தெழிதி னோமே!
ஓவிய மாகப் பாக்கள்
உயர்வெனத் தந்தோம் நாங்கள்!
ஆவலாய் எழுதி னோமே
ஆக்கமா யூக்கந் தந்தார்!
பாவலர் மணியென் றேநற்
பாந்தமாய் விருதுந் தந்தார்! 3
காயொடு கனியும் வைத்துக்
கவிதைகள் புனைய லாமோ;
நோயொடு வாழ்வ தும்மே
நுவலுவேன் துன்ப மென்றே!
பேயொடு வாழ்க்கைப் பட்டால்
பித்தமும் ஏறுந் தானே;
தாயொடு பிள்ளை யைப்போல்
தக்கதோர் இன்பம் உண்டோ! 4
- வ.க.கன்னியப்பன்