வைபோகக் கண்ணீர்

வைபோகக் கண்ணீர்
************************
வெற்றிலையில் பாக்குவைத்துக் கொண்டு
விருந்துக்கு அழைப்பதெனு மொன்று
அற்றைநாள் பெரியவர்கள்
ஆக்கிவைத்தச் சடங்கதனை
முற்றாக மாற்றினரே இன்று
*
முகநூலில் அழைப்பிதழைப் போட்டு
முடிவாக வந்துவிடக் கேட்டு
அகந்தன்னை மூடிவைத்த
அலங்காரத் தோரணையில்
இகமின்று பாடுதொரு பாட்டு
*
வைபோக மண்டபத்தில் கூடும்
வயதான உறவுகளில் தேடும்
மெய்யான பேரன்பும்
மீட்டெடுக்கும் நினைவுகளும்
பொய்யாக DJக்கள் பாடும்
*
சினிமாவின் படப்பிடிப்புக் கோலம்
சிறப்பாக இடம்பிடிக்கும் சாலம்
புனிதமான நிகழ்வுகளைப்
போரடிக்கச் செய்வதையே
இனிமையெனக் கொள்கிறதே காலம்
*
வந்தவரை வரவேற்கப் பன்னீர்
வசதயில்லாப் பேர்களுமே தண்ணீர்(மது)
தந்துவிட வேண்டுமெனத்
தாகமுடன் வருவோரின்
தொந்தரவால் விளைகிறதே கண்ணீர்
*
மெய்யன் நடராஜ்
06-01-2022

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Dec-22, 2:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 46

மேலே