பால பணியாளர்

பாலப் பணியாளர்
================
பள்ளிக்கூடம் விட்டதும்
வகுப்பறைகளில் நுழைந்துக்
காகிதம் சேகரித்து வெளியேறும் சிறுவர்களின்
பை முழுவதும் நிறைந்தே இருக்கிறது
படிக்க வழி இல்லாத ஏக்கம்
*
பணம் படைத்தவன் சமையல் அறையில்
தேய்த்து வெளுக்கும் பாத்திரங்களுக்கு மத்தியில்
தேய்த்தும் வெளுக்காப் பாத்திரமாய் கருத்தே கிடக்கிறது
பல ஏழைச் சிறுமியரின் எதிர்காலம்
*
நகரத்து உணவகங்களில் எவரோ உண்ட
எச்சில் இலை எடுத்துப் போட்டுத்
தண்ணீர் வைக்கும் சிறுவர்களிடம் தீராமல் இருக்கிறது
தன் தம்பியுடன் விளையாடும் தணியாத தாகம்
*
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தக்
கல் உடைக்கும் சிறுவர்கள் மத்தியில்
சல்லியாய் சிதறிக் கிடக்கிறது
அடித்து நொருக்கிய சமுதாயத்தின் மீதான ஆத்திரம்
*
குறைந்த விலை உழைப்பென
மலிந்த
பாலப் பணியாளர், பொது வெளியில்
எதிர்ப்புக் காட்டி மறைமுகமாக
ஆதரிக்கும்
வர்க்கத்தின் பலி ஆடுகளாய் மலிந்துவிட்டனவே இங்கே!
*
மெய்யன் நடராஜ்
12-12-2022

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Dec-22, 1:38 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : paala paniyaalar
பார்வை : 24

மேலே