எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் – நாலடியார் 363
நேரிசை வெண்பா
(உயிரெழுத்து ஏறிய வல்லின எதுகை)
எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை. 363
- பன்னெறி, நாலடியார்
பொருளுரை:
தன் கணவற்குச் சினத்தைமூட்டி ‘அடி' என்று எதிரில் அடங்காது நிற்கும்மனைவி அவனுக்குக் கூற்றுவனாவாள்;
காலை நேரத்தில் அடுக்களையிற் சென்று உணவு சமைக்காதவள் தன் கணவனுக்குக் கொடிய நோயாவாள்,
சமைத்ததை அவனுக்குரிய உணவாக இடமால் உண்பவள் இல்லத்தில் வாழும் பேயாவாள்,
இம் மூவகை இயல்புடைய மாதரும் தம்மை மணந்து கொண்ட கணவன்மாரை உயிரோடு வருத்தும் கருவிகளாவர்.
கருத்து:
இல்வாழ் பெண்டிர் அடக்கமும் சுறுசுறுப்பும் அன்புமுடையவராய் விளங்கவேண்டும்.
விளக்கம்:
சினத்தை மேலுமேலும் மூளச்செய்து கணவற்கு இறுதியுண்டாக்குதலின் ‘கூற்ற'மெனவும்,
காலத்தில் உணவு கிட்டாமற் செய்தலால் நோயுண்டாதலின் ‘பிணி' எனவும்,
பெரும்பசி கொண்டு முன் உண்ணுதலின் பேய்' எனவுங் கூறினார்.
சிறுகாலை என்றது காலை நேரத்தின் முற்பகுதியிலுந் தொடக்க நேரத்தைக் குறித்தது.
அரும்பிணி - பிணிக்கு அருமையாவது, என்றும் இவ்வாறே நடந்து தீரா நோயாதல்,
அட்டதனை உதவாதாள் என்றதன் மேலும் உண்டியென்றது, அட்டது தன் கணவற்குரிய உண்டியென்று கருதாதவளாய், பேய்க்குப் பெரும்பசி இயல்பாதல் "பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் "1 என்பதனானும் பெறப்படும்.