என்ன செய்ய

குழந்தை.....
பிறந்தவுடன்
குடும்பத்தில்...சுற்றத்தில்
சந்தோஷங்கள்....கை குலுக்கல்கள்
இனிப்பு பரிமாற்றங்கள்.
குழந்தை அழுதுவிட்டால் - இல்லை
அதற்கு ஒன்றென்றால்
எத்தனை பதட்டங்கள்...
எத்தனை கதறல்கள்...
எத்தனை அழுகைகள்.
குழந்தை
சிறிது வளர்ந்துவிட்டால்
அதன் மழலை...
அதன் விளையாட்டு...
ரசிக்கப்படுகிறது.
கொண்டாடப்படுகிறது.
அதன் கோபம்...
அதன் பிடிவாதம்...
சுகிக்கப்படுகிறது.
சகிக்கப்படுகிறது.
மேலும் வளர்ந்து
பள்ளிப் பருவத்தில்
எத்தனை கட்டுப்பாடுகள்...
எத்தனை கண்காணிப்புகள்...
வளர்ந்து கல்லூரியில்
அடிவைத்தபின்னும்
அதே கட்டுப்பாடுகளும்..
கண்காணிப்புகளும்
தொடர்கின்றன.
வேலைக்குப் போனபின்
எத்தனை ஆலோசனைகள்...
எத்தனை வழிகாட்டுதல்கள்.
ஒருத்தியை காதலித்தாலோ...
மணம் முடித்தாலோ
எத்தனை இடையூறுகள்
எத்தனை சவால்கள்..
வாழ்வின் தொடக்கத்திலோ
எத்தனை தடங்கல்கள்...
எத்தனை தலையணை மந்திரங்கள்.
குழந்தைகள் பிறந்தபின்
எத்தனை உழைப்புகள்...
எத்தனை சேமிப்புகள்.
அவர்கள் படிப்பிற்காகவும்
திருமணத்திற்காகவும்
எத்தனை கடன்கள்...
எத்தனை சமரசங்கள்.
பேரப்பிள்ளைகள் பிறந்தவுடன்
எத்தனை கதைகள்...
எத்தனை விளையாடல்கள்.
நாடி நரம்புகள் தளர்ந்து
ஓய்வுபெற்றபின்
எத்தனை கோபங்கள்
எத்தனை பிடிவாதங்கள்.
ஆனால் ஒன்று
இந்த கோபங்களோ இல்லை
பிடிவாதங்களோ - இங்கு
ரசிக்கப்படுவதுமில்லை
அங்கீகரிக்கப்படுவதுமில்லை.
ஆறடி சுருங்கி
நாலடி ஈரடியாய்
குறைந்தபின்
படித்த அறிவினாலும்
கிடைத்த அனுபவத்தினாலும்
மீண்டும் குழந்தையாய் மாறிட
எத்தனை முயற்சிகள்...
எத்தனை போராட்டங்கள்
மாறிட முயல்வதும்
போராடி சலிப்பதும்
பரிதாபமாய் இந்த
குழந்தை
பெற்றதினாலும் உற்றதினாலும்
ஏன் இந்த சமுதாயத்தினாலும்
ஒதுக்கப்பட்டு... நிராகரிக்கப்பட்டு
சகிக்கப் படாமல்
குப்பையாய் தூக்கி எறியப்படும்
இந்த அவல நிலை
இயற்கை நிகழ்வுதான்.
ஒரு சுழற்சி முறைதான்.
என்ன செய்ய?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (26-Jan-23, 10:20 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : yenna seiya
பார்வை : 55

மேலே