சமையலறையில் அவள்

மைதானம் செல்ல ஆசைப்பட்டவள்
இதோ
மைதாவைப் பிசைந்து கொண்டிருக்கிறாள்.

இத்தாலி ஒலிம்பிக்கில் மெடல்
வாங்க நினைத்தவள்
இத் "தாலி" அணிந்தபடி குடல் சமைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் குழம்பிலும்
மனத்திலும் "பெருங்காயம்" இருக்கிறது; எப்படியும் வீட்டாரின் கண்ணுக்குத் தெரியாமல் அதைக் கரைத்துவிடுவாள்.

அவள் மனதில் "எழுமிச்சைகளை" யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை

அவள் எவ்வளவு அக்கறையாய்க் கவனித்தாலும்
மாமியாரின் மன"மிளகு"வதில்லை.

மொத்தத்தில் அவர்கள் போட்டுவைத்த "பீட் ரூட்டிலேயே" நடக்க வேண்டியிருக்கிறது.

என்றாவது ஒருநாள் அவளுடைய சோற்றுக்கு
அவர்கள் "சமரசம்" ஊற்றுவார்களா?
காத்திருக்கிறாள்

அதுவரைக்கும்
எல்லா இடங்களிலும் நிராகரிக்கப்பட்டு
சிங்க்கில் தண்ணீரோடு சுழன்று கொண்டிருக்கும் கருவேப்பிலை போலச்
சுழன்று கொண்டிருப்பாள், அவள்.

எழுதியவர் : திசை சங்கர் (29-Jan-23, 7:11 am)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 72

மேலே