மூன்று வரிக் கவிதைகள்
1)
தன் நிழலையே தலையணையாக
வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறான்
நடைபாதைப் பிச்சைக்காரன்.
2)
எழுதியதை வெட்டிய பின்பும் தெரிந்து கொண்டே இருக்கிறது வார்த்தை எழுதியவன் கண்களுக்கு..
3)
யாருக்கும் எழுந்து இடம் கொடுப்பதாயில்லை
கல்நெஞ்சக்கார ஓட்டுநர்.
4)
கண் தெரியாத சிறுமி
ஏற்றிய தீபம் காற்றில் படபடத்தது
கைகளைக் குவித்தார் கடவுள்
5)
கைதியின் கடைசி ஆசை நிறைவேறியது
ஊஞ்சல் ஆடினான் தூக்குக் கயிற்றில்..
6)
லாரியின் கீழே தூங்குகிறது நாய்
டீசல் டேங்கில்
"தினமும் என்னைக் கவனி "
7)
பிறக்கும் போதே
பொட்டு வைத்தபடி பிறக்கிறது பூவரசம்பூ.
8)
கடல்நீர் எல்லாம் வற்றிவிட்டால்
மீன்களுக்கு முன்பே
இறந்துவிடும் கடற்கரை.
9)
இத்தனை வாகனங்கள் கருக்கிய பின்னும்
எப்படிச் சிரிக்க முடிகிறது
இந்த அரளிப்பூக்களால்!?