பெறுநசையாற் பின்னிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை – நாலடியார் 381

நேரிசை வெண்பா

அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை 381

- கற்புடை மகளிர், நாலடியார்

பொருளுரை:

பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணி என்னுந் தேவர்கோன் மனைவி போல் வாழ்க்கையிற் பெரிய புகழ் வாய்ந்த மகளிராயினும்,

அவருள் உணவு முதலிய பொருள்களை விரும்பி அவற்றை அடையும் வேட்கையால் தன்பின்னே இரந்து நிற்கும் இரவலர் இல்லாமையையே தனது இல்லற ஒழுக்கத்தாற் காத்தொழுகும் இயற்கை மணங் கமழும் நெற்றியை உடைய பெண்ணே அந்த இல்லறத்தின் பயன்களாகிய மேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள்.

கருத்து:

கற்புடை மகளிர்க்கு விருந்து புறத்தரும் இயல்பு இன்றியமையாதது.

விளக்கம்: கற்பாவது - கணவனிடம் ஆழ்ந்த அன்புணர்வுடைமை; அயிராணியின் கற்புக் கூறவே இவரது கற்பும் பெறப்பட்டது; படவே, பின்னிற்பாரென்றது இரவலர்க்காயிற்று;

அயிராணி கூறப்பட்டமையின், கற்பொழுக்கத்தோடு திரு உரு முதலிய ஏனைப் படைப்புக்களும் பெறப்பட்டன.

இல்லற ஒழுக்கமாவது, அறவோர்க்களித்தல் முதலியன; அவற்றுள்ளும் விருந்து புறந்தருதல் மிக இன்றியமையாததாதலின், ‘பின்னிற்பாரின்மையே பேணும் நறுநுதலாள் துணை' யெனப்பட்டது,

வீடுபயக்கும் அருணெறிக்கு ஏதுவாய்ப் பொருள்களிற் பற்றின்றி நின்று உலகில் அறம் வளர்க்கும் பயிற்சியே இல்லறத்தில் நடைபெறுதற்கு உரியதாகலின், ஒரு பயனுங் கருதாது ஆருயிர்களை ஓம்புதலாகிய விருந்து புறந்தருதலின் இன்றியமையாமை இவ்வாறு உணர்த்தப்பட்டது.

இல்லம் போதுவார் குறிப்பறிந்து, அவரை இரவலராக்காது உடனே விருந்தாக ஏற்றொழுகுக வென்பார்; பின்னிற்பார் இன்மையே பேணும்' என்றார்; நன்மையென்றது, தவம் முதலிய துறவற நிலைகளை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே