ஊரற்கு அதனால் வலக்கண் அனையார்க்கு உரை – நாலடியார் 388

இன்னிசை வெண்பா

கொடியவை கூறாதி பாண!நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்(கு) அதனால்
வலக்கண் அனையார்க்(கு) உரை. 388

- கற்புடை மகளிர், நாலடியார்

பொருளுரை:

பாணரே! கேட்க இன்னாதனவான தலைவனைப் பற்றிய கொடுமையான செயல்களை மறைத்து நயவுரைகளை எம்மிடங் கூறாதே;

அவ்வாறு நீ கூறுவதானால், ஊரனான எம் தலைவனுக்கு யாம் உடுக்கையின் இடப்பக்கத்தை ஒத்துப் பயன்படாமல் இருக்கின்றேன் என்பதால் மெதுவாக அடியிட்டு ஒதுங்கிச் சென்று அவ்வுடுக்கையின் வலப்பக்கம் போல் பயன்படுதலுடைய பரத்தையர்க்குக் கூறு’ என்கிறாள் தலைவனின் மனைவி.

கருத்து:

கற்புடை மகளிர் தமது ஊடுதலாற் கணவரது திருத்தத்தை நாடுதற்குரியர்.

விளக்கம்:

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனைப் பற்றி நயவுரைகள் கூறிக்கொண்டு பாணன் வாயில் வேண்டத் தலைவி மறுத்தமை கூறியது. இது புலவியாற் சினக்குறிப்போடு இருந்தமையால் நயவுரைகள் கொடியவையாயின.

பாணன் தலைவனுக்குத் தூதாக வந்தவன்; அஞ்சிப் பதுங்கி யொதுங்கிச் செல்லும் அவனதிழிந்த நடையியல்பு கூறி இகழ்வாள், ‘அடி பையஇட்டொதுங்கிச் சென்று' என்றாள்.

துடியின் கண்ணென்றது அதன்கண் ஒலியெழுப்பும் இடம்; உவமை பயன்படாமையும் பயன்படுத்தலுங் காட்ட எழுந்தது.யாம் என்னும் பன்மை உயர்வினின்றது; ஊரன், மருதநிலத்துத் தலைவன்;

ஊடல் மருதத்தின் உரிப்பொருளாகலின் இவ்வாறு கூறுதல் மரபு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 7:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே