513 கரவில் வந்தான்தனைக் கொன்றேன் கண்டேன் என்மகன் என்றே – கணிகையரியல்பு 40

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இரவினிலென் னுடன்துயின்ற கோதையடிக் கடிவெளியே
..ஏகி மீண்டாள்
கரவறிவான் பின்றொடர்ந்தேன் கொல்லையிலே காளையொடுங்
..கலந்து நின்றாள்
அரவமெனச் சீறியவ்வாள் மேல்வீழ்ந்து தாக்கவுயிர்
..அற்று வீழ்ந்த
உருவையுற்றுப் பார்க்கவென்ற னொருசேயென் றறிந்துநெஞ்சம்
..உருகி னேனே. 40

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

இரவு என் உடன் உறங்கிய பொதுமகள் அடுத்து அடுத்து வெளியிற் போய்த் திரும்பினாள். அவ்வாறு அவள் சென்று மீளும் மறைவை அறிவதற்காகப் பின் தொடர்ந்தேன். தோட்டத்தில் ஒரு கட்டிளைஞனுடன் கலந்து மகிழ்ந்திருந்தனள். இதைக் கண்டதும் யான் பாம்பெனச் சீறி அந்த ஆள்மேல் வீழ்ந்து சண்டையிட்டேன். சண்டையில் அந்த ஆள் மாண்டு விழுந்தான். உற்றுப் பார்த்தேன். மாண்டவன் என்னுடைய ஒரே மகன் என்று கண்டேன். மிகவும் மனம் வருந்தினேன்.

கரவு - மறைவு. காளை - இளைஞன்; வாலிபன். தாக்கல் - சண்டையிடல். சேய் - மகன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 9:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே