80 ஈன்றார்க்கு நினைவுசெயல் எய்தும் மகப்பொருட்டு - தாய் தந்தையரை வணங்கல் 7

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மண்ணினில் அன்னை தந்தை
= மறம்அறஞ் செயினும் நோன்பு
பண்ணினும் உடல்வ ருந்தப்
= பணிபுரி யினும ருந்தொன்(று)
உண்ணினுங் களிக்கி னுந்துன்
= புற்றய ரினும னத்தொன்(று)
எண்ணினுந் தம்பொ ருட்டன்(று)
= ஈன்சுதர் பொருட்டா லன்றோ. 7

- தாய் தந்தையரை வணங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இப்பூமியில் நம் அன்னை, தந்தையர் வன்செயல், நற்செயல்கள் செய்தாலும், தவம் பண்ணினாலும், மெய்வருந்தி வேலை செய்தாலும், மருந்து ஏதாகிலும் உட்கொண்டாலும், மகிழ்ந்தாலும், துன்பமுற்றுத் தளர்ந்தாலும், மனதில் ஒன்றை நினைத்தாலும் எல்லாமே பிள்ளைகள் நன்மையைக் கருதியேயன்றித் தங்களுக்காக அல்ல” என்று பெற்றவர்களின் எண்ணம், செயல் எல்லாம் பிள்ளைகளின் நன்மை கருதியே ஆகும் என்கிறார் இப்பாடலாசிரியர்.

பணி - பாடு. களிப்பு - மகிழ்வு. அயர்வு - தளர்வு. சுதர் - மக்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Feb-23, 6:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே