பெட்ரோல் போட நூறு ரூபாய்

ஒரு முறை நான் மதுரை சென்றிருந்தேன். என் மனைவியுடன் ஒரு பஜாரில் நடந்துசென்றுகொண்டிருந்தேன். மதியம் இரண்டரை மணி இருக்கும். அந்த நேரத்தில் மக்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்போது என் பக்கத்தில் ஒருவர் அவரது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து "சார் நீங்கள் குமார்தானே என்று கேட்டார்?". நான் " இல்லை. என் பெயர் சுப்ரமணியன்" என்றேன். அந்த மனிதர் "நீங்கள் என் நண்பர் குமாரைப்போலவே இருக்கிறீர்கள் . உங்களுக்கு எந்த ஊர்" என்றார். அந்த மனிதர் பார்ப்பதற்கு கவுரவமாக இருந்ததால் நான் "நான் பிறந்த ஊர் சென்னை ஆனால் தற்போது கோயம்பத்தூரில் வசித்து வருகிறேன்" என்றேன். அந்த மனிதர் உடனே "ஓ , என் நண்பன் குமாரும் சென்னைதான்" என்றார்.

நான் "பரவாயில்லை" என்று சொல்லிவிட்டு என் நடையைத்தொடர ஆரம்பித்தபோது அந்த மனிதர் "என் ஸ்கூட்டரிலிருந்து எவனோ ஆயிரம் ரூபாய் பெட்ரோலை திருடிவிட்டான். இப்போது வண்டிக்கு பெட்ரோல் போடவேண்டும். என்னிடம் உடனடியாக பணம் இல்லை" என்று பணிவுடன் சொன்னவுடன் நான் உடனேயே என் பர்ஸிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொடுத்தேன். அந்த மனிதர் "இந்த அளவுக்கு நீங்கள் உதவியதற்கு நன்றி" என்று சொல்லிவிட்டு சர்ரென்று அவர் ஸ்கூட்டரில் பறந்துபோய்விட்டார்.

அந்தக்கணம் தான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது , இந்த மனிதர் பொய் சொல்லி என்னிடம் பணம் பெற்றுக்கொண்டிருக்கக்கூடும் என்று. அவர் தன் பெயரையும் எனக்குச்சொல்லவில்லை. அவரிடம் மொபைல் போன் இருந்தது. அதில் 'போன் பே' இருந்திருக்கக்கூடும். அப்படி என்றால் அவர் மொபைல் போன் மூலமாகக்கூட பெட்ரோல் போட்டுக்கொள்ள முடியும். நான் அவரிடம் ஸ்கூட்டரின் பெட்ரோல் டாங்கை திறந்து காட்டச்சொல்லியிருந்தால் அவர் அதைத்திறந்திருப்பாரா அல்லது ஒருவேளை அவர் டாங்கியைத் திறந்து காட்டியிருந்தால் அதில் பெட்ரோல் இருந்திருக்கக்கூடுமா என்பதும் தெரியாது.

நான் நூறு ரூபாய் கொடுத்ததுகூட உண்மையில் அவர் பேட்ரோல் போடத்தான் கேட்கிறார் என்பதனால் அல்ல. பார்த்தால் பண்பாடு உள்ள மனிதரைப்போல தெரிந்ததினால்தான். ஒரு வேளை அவருக்கு அந்த நேரத்தில் பசி இருந்து கையில் பணம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதுபோன்ற காரணங்கள் கருதிதான் நான் கொடுத்தேன். பொதுவாக எவர் வந்து என்னிடம் உதவி கேட்டாலும் என்னால் முடிந்ததை செய்வேன் என்பதனால் எந்த ஒரு கேள்வியையும் கேட்காமல் நான் நூறு ரூபாய் பணத்தை அவருக்குக்கொடுத்தேன்.

பிச்சை எடுப்பதுகூட ஒருவிதத்தில் பரவாயில்லை அல்லது 'எனக்கு பசி ஆனால் கையில் பணம் இல்லை. கொஞ்சம் பணம் கொடுத்து உதவமுடியுமா" என்று ஒளிவு மறைவின்றி கேட்டாலும் பரவாயில்லை. ஆனால் மக்களை முட்டாளாக்கி , இதைப்போல ஏதாவது நவீன முறையில் ஏமாற்று வேலைகள் செய்து பணம் பெற்றுக்கொள்வது என்பது இந்நாட்களில் மிகவும் அதிகரித்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Feb-23, 3:39 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 14

மேலே