அன்பென்றால் அன்னதானம்

ஒரு எளிய சந்நியாசி மிகவும் பசியுடன் இருந்தார். ஒரு வீட்டிற்குச் சென்று " அடியேனுக்கு ஒருபிடி சோறு கொடுங்கள்" என்று தட்டை நீட்டினார். ஒரு பெண்மணி வெளியே வந்து "என் சமையல் அவ்வளவு நன்றாக இருக்காது. அடுத்த தெருவில் 'உங்கள் ஹோட்டல்' என்று ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்கே நல்ல சுவையான சமையல் கிடைக்கும்" என்றாள்.
சந்நியாசி சொன்னார் "அம்மணி, எனக்கு சுவை எதுவும் தேவையில்லை. ஒரு கைப்பிடி சோறு மட்டும் இட்டாலே போதும்" என்றார். பெண்மணி "இனிமேல்தான் நான் சோறு வடிக்கவேண்டும் . நீங்க அந்த ஹோட்டலுக்கு போனால் நன்கு சாப்பிடலாம்" என்று சொன்னப்போது சந்நியாசி "நல்லது அம்மணி. நான் வேறு இல்லங்களுக்கு சென்று பார்க்கிறேன். எங்கும் கிடைக்கவில்லை என்றாள் 'உங்கள் ஹோட்டலுக்கு' செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த தெருவில் வேறு ஒரு வீட்டிற்குச் சென்று "அடியேனுக்கு ஒருபிடி சோறு கொடுங்கள்"' என்று தட்டை நீட்டினார். ஒரு பெண்மணி " நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை அன்னதானம் கொடுப்போம். நீங்கள் அப்போது வந்தால் வயிறு நிறைய சாப்பிடலாம்" என்றாள். சந்நியாசி " எப்போது அன்னதானம்?" என்று கேட்டார். அந்தப்பெண்மணி சொன்னாள் " போனவாரம் தான் அன்னதானம் கொடுத்தோம். இனி அடுத்தவருடம்தான். நீங்கள் அதுவரைக்கும் எப்படி காத்திருப்பீர்கள். ஆகவே பக்கத்துத் தெருவில் உள்ள ' உங்கள் ஹோட்டலுக்கு' சென்று வயிறார உண்ணுங்கள்"

சந்நியாசி இன்னொரு வீட்டிற்குச்சென்று உணவு கேட்டபோது அங்குள்ள பெண்மணி "நீங்கள் பார்த்தால் படித்தவர் போல்தெரிகிறது. ஏதாவது தொழில் பார்த்து வயிற்றை காப்பாற்றிக்கொள்ளமுடியதா?" என்று கேட்டாள். சந்நியாசி "நான் பள்ளிக்கே செல்லவில்லை. ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது கொஞ்சம் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி" என்று சொல்லிவிட்டு இன்னொரு வீட்டிற்கு சென்றார். அங்கே ஒரு தம்பதியினர் வெளியே வந்து "அடடா, சந்நியாசியா, பார்த்தாலே சிவப்பழம் போல இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு சோறு கொடுத்தால் மந்திரத்தால் எங்களுக்கு ஏதாவது பழம் வரவழைத்து தருவீர்களா? என்று கேட்டனர்.
சந்நியாசி "நான் மந்திரம் தந்திரம் எதுவும் அறியாதவன். மௌனம்தான் எனது மந்திரம். தனிமைதான் எனது தந்திரம்" என்று சொன்னப்போது , அந்த தம்பதியினர் "மந்திரம் தந்திரம் தெரியாத நீங்கள் எப்படி சந்நியாசியாக இருக்கமுடியும். உண்மையான சந்நியாசிகளுக்குத்தான் நாங்கள் சோறு கொடுப்போம். ஏதோ பார்த்தால் கொஞ்சம் சாதுவாகத் தெரிகிறீர்கள். பக்கத்து தெருவில் உள்ள 'உங்கள் ஹோட்டலுக்கு' செல்லுங்கள். உங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு கதவைத்தாளிட்டுக்கொண்டனர்.

சந்நியாசி நினைத்தார் "நான் என்ன பாவம் செய்தேன் இப்படிப்பட்ட பணம் பொருள் இருந்தும் ஒரு எளிய சந்நியாசிக்கு ஒரு பிடி சோறுகூட கொடுக்காத இப்படிப்பட்ட மனிதர்களின் வீடு தேடிச்சென்று பசிக்கு ஒருபிடி சோறு கேட்க? மாறாக ஒவ்வொருவரும் 'உங்கள் ஹோட்டல்' சென்று சாப்பிடுங்கள் என்று கையைக்காட்டி விட்டார்கள். அப்படி என்ன அந்த ஹோட்டலில் விசேஷம்?"

இவ்வாறு சிந்தித்தபடி சந்நியாசி அந்த வீட்டிலிருந்து வெளியேறியபோது பக்கத்துக்கு வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்த ஒரு பெண்மணி "ஐயா, பார்த்தால் தெய்வீகமான சாதுவைபோலத்தெரிகிறீர்கள். எங்கள் வீட்டிற்கு கொஞ்சம் வந்து செல்லுங்கள்" என்று அன்புடன் அழைத்தபோது சந்நியாசியும் சரி என்று சொல்லிவிட்டு அந்தப்பெண்மணி வீட்டிற்குள் சென்றார். அந்தப் பெண்மணி சந்நியாசியை வெளியில் நிற்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு வாளியில் நீர் எடுத்துவந்து அவரிடம் கொடுத்து "ஐயா உங்கள் கால்களை கழுவிக்கொண்டு உள்ளே வாருங்கள்" என்றாள். சந்நியாசியும் அவ்வண்ணமே செய்துவிட்டு உள்ளேசென்றர். பெண்மணி "உட்காருங்கள் ஐயா" என்றதும் அங்குள்ள சோபாவில் சந்நியாசி அமர்ந்தார். பிறகு அவள் உள்ளே சென்று அவள் கணவரையும் அழைத்துவந்து "அய்யா, நாங்கள் உங்கள் கால்களில் விழுந்து வணங்குகிறோம். எங்களுக்குத் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை குழந்தை பிறக்கவில்லை. எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க உங்கள் ஆசிகளை எங்களுக்கு அளியுங்கள்" என்று சொல்லிவிட்டு கணவருடன் சந்நியாசியின் காலடியில் விழுந்து எழுந்தார்கள். சந்நியாசி "நடப்பவை நல்லதாகவே அமைய என் ஆசிகள்" என்று கூறினார்.
அப்போது அவருக்கு பசி மிகவும் அதிகமாகிவிட்டது. அவர் "அம்மணி, எனக்கு குடிக்க நீர் கிடைக்குமா?" என்று கேட்டார். அந்தப் பெண்மணி "உங்களுக்கு இல்லாத நீரா, இதோ என்று பக்கத்தில் இருந்த பானையிலிருந்து நீரை ஒரு கூஜாவில் நிரப்பிக் கொடுத்தாள். சந்நியாசி அவளுக்கு நன்றி கூறிவிட்டு "நான் சென்று வருகிறேன். பக்கத்துத் தெருவில் 'உங்கள் ஹோட்டல்' இப்போது திறந்திருக்கும்தானே?" என்று கேட்டார். அந்தப்பெண்மணி "நீங்கள் உடனடியாகச்செல்லுங்கள். மணி இப்போதே மதியம் இரண்டரை. அவர்கள் இந்த நேரத்தில் தான் ஹோட்டலை அடைப்பது வழக்கம். வேகமாக நடந்து செல்லுங்கள். ஐந்து நிமிடம்தான் ஆகும்" என்று சொல்லிவிட்டு, சந்நியாசி வீட்டிற்கு வெளியே சென்றவுடன் வெளிக்கதவை தாளிட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

சந்நியாசி நினைத்தார் "நகரத்து மக்களிடம் அதிகம் பணம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மையான உயர்வான அன்பான கருணையும் இரக்கமும் கூடிய மனிதாபிமானம் அவர்களிடம் இல்லவே இல்லை என்பதை இன்று அறிந்துகொண்டேன்". பிறகு அங்கிருந்து மெள்ள நடந்து பக்கத்துக்கு தெருவுக்குச் சென்றார். அங்கே 'உங்கள் ஹோட்டல்' உணவகத்தை கண்டார். உள்ளே நுழைந்தார்.
அங்கே கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த மனிதரிடம் "ஐயா எனக்கு ஒரு கைப்பிடி சோறு கிடைக்குமா" , என்று தன் தோள்பையிலிருந்து ஒரு தட்டை எடுத்து நீட்டினார். அந்த மனிதர் "உங்களிடம் பணம் இருக்கிறதா?" என்று கேட்டார். சந்நியாசி அமைதியாக "பணம் இருந்தால் நான் உங்களிடம் ஒன்றும் கேட்காமலேயே உள்ளே சென்றிருப்பேன்" என்றார். அந்த மனிதர் " பணம் இல்லாமல் வந்துவிட்டு உணவு கொடு என்றால் எப்படி? பணம் இருந்தால் உணவு கிடைக்கும். ஒரு சாப்பாடு நூற்றிஐம்பது ரூபாய்" என்றார். சந்நியாசி "புரிகிறது. நான் ஒரு ஏழை சந்நியாசி. என்னிடம் இப்போது ஒரு பைசாகூட இல்லை. பசி என்பதால் வந்து உங்களிடம் ஒரு கைப்பிடி சோறு கேட்கிறேன்." என்றார். அந்த மனிதன் "பொருள் இல்லாதவர்க்கு இந்த உலகம் இல்லை. பணம் இல்லாதவர்க்கு இந்த ஹோட்டலில் சாப்பாடும் இல்லை" என்று கொஞ்சம் கடுமையாக கூறினார் சந்நியாசிக்கு அப்போது கொஞ்சம் கோபமும் வந்தது "பணத்திற்காக வியாபாரம் செய்பவர்களும் தர்மத்திற்காகவும் சிறிது செய்கிறார்கள் தானே ?" என்றார். அந்த மனிதர் " தர்மத்திற்காகத்தான் வருடம் ஒருமுறை அன்னதானம் செய்கிறோம். அப்போது வாருங்கள், ஓசியில் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு செல்லலாம். இப்போது இங்கிருந்து நீங்கள் கிளம்பலாம்" என்று கொஞ்சம் எரிச்சலுடன் கூறியவுடன் சந்நியாசி அங்கிருந்து புறப்பட்டார். அவர் நினைத்துக்கொண்டார் "நான் உணவு கேட்டுப்போன எல்லோருமே 'உங்கள் ஹோட்டல்' சென்று உண்ணுங்கள் என்றதின் அர்த்தம் எனக்கு இன்னும் விளங்கவில்லை." ஹோட்டலைவிட்டு சாலைக்கு வந்தவர், பசியாலும் வெய்யிலினாலும் துவண்டு சாலையின் ஓரத்தில் சாய்ந்தார்.

சரியாக அந்த நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு மனிதர், வண்டியை சந்நியாசிக்கு அருகில் நிறுத்திவிட்டு, அவர் பக்கத்தில் வந்து " அய்யா, இந்தாருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள் என்று ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்." சந்நியாசி மெல்ல எழுந்து கொஞ்சம் நீர் பருகினார். அவர் கண்கள் இடுங்கிப்போய் இருந்தன. அந்த மனிதர் வண்டியில் உள்ள ஒரு பையிலிருந்து இரண்டு பொட்டலங்களை கொண்டுவந்தார். "ஐயா , இந்தாருங்கள். கொஞ்சம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும்." என்று அன்புடன் கொடுத்தார். சந்நியாசிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "கொஞ்சம் இங்கே ஏதாவது நிழல் இருந்தால் நான் அங்கே அமர்ந்து இதை உண்ணுகிறேன்" என்றபோது வந்தவர் "இதோ, எதிரிலே ஒரு பூங்கா இருக்கிறது. நான் உங்களை அங்கே கொண்டு விடுகிறேன்."என்று சொல்லி அவரைத் தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமரச்செய்து, பூங்காவில் அவரை ஒரு பெஞ்சினில் அமரச்செய்தார்.
சந்நியாசி அவர் கொடுத்த உணவை மிகவும் ஆவலுடன் ரசித்து உண்டு மகிழ்ந்தார். "நீங்கள் மிகவும் நன்றாக வாழ்வீர்கள். ஆண்டவன் உங்களுக்கு எப்போதும் நல்ல வழி காட்டுவார்" என்று வாழ்த்தினார். அந்த மனிதர் நன்றி சொல்லிவிட்டு புறப்படுகையில் சந்நியாசி "ஐயா, நான் வடலூர் என்கிற ஊருக்குச் செல்லவேண்டும். அது எவ்வளவு தூரம்" என்றார். அந்த மனிதர் " இங்கிருந்து சுமார் இருநூறு கிலோமீட்டர் தூரம் இருக்கும். உங்களைவேண்டுமானால் நான் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுகிறேன். அங்கிருந்து வடலூருக்குச் செல்ல பேருந்துகள் கிடைக்கும்" என்றபோது சந்நியாசி "நீங்கள் மிகவும் நல்ல மனிதர். ஆமாம், நீங்கள் உணவு எடுத்தீர்களா" என்று கேட்டார். அந்த மனிதர் "இனிதான் வீட்டிற்கு சென்று என் மனைவியுடன் உணவு எடுக்கவேண்டும்" என்றார்.

சந்நியாசி ஆச்சரியத்துடன் "இப்போது நீங்கள் எனக்கு கொடுத்த உணவு யார் செய்தது? என்றார். அந்த மனிதர் "ஐயா என் மனைவி செய்ததுதான். மாதத்தில் கடைசி ஞாயிறு தோறும் காலை நாங்கள் சாம்பார் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் செய்து இருபது முப்பது ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறோம்" என்றார்.
சந்நியாசி "முதலில் வீடு சென்று நீங்கள் உணவு எடுங்கள். நான் இங்கிருந்து விசாரித்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றுவிடுவேன். நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் எனக்கு வடலூர் செல்வதற்கு மட்டும் பயணச்சீட்டு தொகையை கொடுத்து உதவினால் புண்ணியமாக இருக்கும்" என்றபோது அந்த மனிதர் "இதோ ஒரு நிமிடம்" என்று சொல்லிவிட்டு அவரது அலைபேசியில் அவள் மனைவியுடன் பேசினார்.
பின்னர் "ஐயா, ஒரு ஐந்து நிமிடங்கள் நீங்கள் பக்கத்தில் பெஞ்சில் படுத்துக்கொள்ளுங்கள். என்னிடம் இரண்டு உணவு பொட்டலம் மீதம் இருக்கிறது. நான் இங்கேயே சாப்பிட்டுவிட்டு, உங்களைப் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுகிறேன். பயணச்சீட்டுக்கு வேண்டிய பணமும் தருகிறேன்" என்றார். சந்நியாசிக்கு நம்பவே முடியவில்லை. ஈவிரக்கம் இல்லாத இந்த நகரத்தில் இப்படிப்பட்ட ஒரு மனிதனும் இருக்கிறானா என்று.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அந்த மனிதர் சந்நியாசியை பேருந்து நிலையம் அழைத்துச் சென்றார். அந்த மனிதருடன் பேருந்து நிலையம் செல்லும்போது, சந்நியாசி உணவு கேட்டுப்போய் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறினார். நிறைவாக 'உங்கள் ஹோட்டல்' சென்ற அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அந்த மனிதர் சொன்னார் "இந்த ஹோட்டல் இங்கு மிகவும் பிரசித்தி வாய்ந்தது. உணவின் விலை கொஞ்சம் அதிகம் ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அந்த ஹோட்டல் நபர் உங்களிடம் நடந்துகொண்ட முறை சரியாக எனக்குப்படவில்லை ".
பேருந்து நிலையம் வந்தவுடன் அந்த மனிதர் அங்கே விசாரித்துவிட்டு சந்நியாசி செல்லவேண்டிய பேருந்தில் அவரை ஏற்றிவிட்டு அவருக்கு ஐநூறு ரூபாயை கொடுத்தார். "பயணச்சீட்டு விலை நூற்றிஇருபது ரூபாய். மீதமுள்ள தொகையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு புறப்பட்டபோது சந்நியாசி "உங்களைப் போன்ற அறிய நபரை நான் இதுவரை கண்டதில்லை. உங்களுடைய அலைபேசி எண்ணை உங்கள் பெயருடன் இந்த புத்தகத்தின் மேலே எழுதிக்கொண்டுங்கள் ' என்று ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். அந்த மனிதரும் அவரது பெயரையும் அலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டார். சந்நியாசி அவருக்கு தன்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக்கொண்டு புறப்பட்டார்.

ஒரு மாதம் கழித்து சந்நியாசிக்கு உதவிய அந்த மனிதருக்கு ஒரு அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் சொந்தக்காரர் " என் பெயர் குணசீலன். நீங்கள் தயாளன்தானே" என்று கேட்டார். தயாளன் " ஆமாம்" என்றதும் அந்த மனிதர் "நான் வடலூரிலிந்து பேசுகிறேன். உங்களை உங்கள் மனைவியுடன் இங்கு வந்து இரண்டு நாட்கள் தங்கவேண்டும் என்று உங்களுக்கு அன்பு அழைப்பு விடுக்க எங்களுக்கு தகவல் கிடைத்தது" என்று சொன்னார்.
இதைக்கேட்டதும் சொல்லொணாதிகைப்பும் ஆச்சரியமும் அடைந்தான் தயாளன். "ஒரு வாரத்திற்கு முன்பு நான் ஒரு ஏழை சந்நியாசியை சந்தித்தேன். அவர், தான் வடலூர் செல்லவேண்டும் என்று என்னிடம் சொன்னதன் பேரில் நான் அவரைப் பேருந்து நிலையம் அழைத்துச்சென்று வடலூர் செல்லும் பேருந்தில் அமர்த்திவிட்டு வந்தேன். அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?" என்று கேட்டான்.
குணசீலன் "ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் வடலூர் சுத்தசன்மார்க்க சபையிலிருந்து பேசுகிறோம். இராமலிங்க வள்ளல் பெருமான் ஜோதிவடிவாக மறைந்தது இங்குள்ள மேட்டுக்குப்பம் வளாகத்தில்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் "வள்ளலார் வாழ்க்கை" என்கிற புத்தகத்தை எங்கள் அலுவலகத்தில் கொடுத்துச்சென்றான். யாரோ ஒரு பெரியவர் அந்தச்சிறுவனைக்கண்டு "நீ பார்த்தால் நல்ல இரக்கம் கொண்ட சிறுவனாகத்தெரிகிறாய். இந்த புத்தகத்தை வடலூர் சுத்தசன்மார்க சபை அலுவலகத்தில் கொடுத்துவிடுகிறாயா" என்று கேட்டுக்கொண்டதன்பேரில் அவன் நேற்று எங்களிடம் இந்த புத்தகத்தை கொடுத்துச்சென்றான். புத்தகத்தின் உள்ளே உங்கள் பெயரும் அலைபேசி எண்ணும் இருந்தது. அதனடியில் "இவர் மிகவும் உயர்ந்த பரந்த இரக்க மனம் கொண்ட ஆத்மா. இவரை எம்மிடம் இரண்டு நாட்களுக்கு அழைத்துவந்து அவருக்கு தொண்டு செய்யவும்" என்று அழகான தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதை யார் எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இது வள்ளலார் பெருமானின் அருளால்தான் என்பதைமட்டும் என்னால் உணரமுடிகிறது. அதனால்தான் நான் உங்களுக்கு இந்த அழைப்பை விடுத்தேன். எனவே தயவு செய்து கூடிய விரைவில் இங்கு வந்து தங்கிச்செல்லவும். நாங்கள் உங்களின் நல்வரவை எதிர்நோக்கியிருக்கிறோம்" என்றதும் தயாளன் "நிச்சயமாக ஐயா. கூடிய விரைவில் வருகிறோம். நாங்கள் வரும் நாளையும் உங்களின் இந்த அலைபேசி எண்ணுக்கு தெரியப்படுத்துகிறேன்" என்றான்.

தயாளன் மிகவும் வியப்புடன் அவன் மனைவி கிருஷ்ணவேணியை கூப்பிட்டு "வேணி, எவ்வளவு ஆச்சரியமான விஷயம் பார்த்தாயா?" என்று அவனுக்கு வந்த அலைபேசி விவரங்களை அவளிடம் கூறினான். அவளும் மிகவும் வியந்து போனாள். "நீங்கள் உதவி செய்த அந்தப்பெரியவர் சாதாரண மனிதர் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கும் ஒருமுறை வடலூர் சென்று வள்ளலார் ஜோதிமயமான இடத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது" என்றாள். தயாளன் கூறினான் "நான் வள்ளலாரைப்பற்றி அதிகம் அறியாதவன். ஆனால் அவர் மிகவும் அன்பும் இரக்கமும் கொண்ட ஒரு மாமனிதர் என்ற ஒன்றை மட்டும் அறிவேன். கூடிய விரைவில் நாம் வடலூருக்குச் செல்வோம்".

பின்னர் தயாளன் அன்றைய தினசரி தாளினை எடுத்துப்புரட்டினான். அப்போது அதனுள் மஞ்சள் வண்ணத்தில் ஒரு சின்ன விளம்பரக் காகிதம் ஒன்று இருந்தது. அதை அவன் எடுத்துப் படித்தான். அதில் குறிப்பிட்டிருந்தது:
"அன்புடையீர்,
"உங்கள் ஹோட்டல்" ஆரம்பித்து ஐந்து வருட ஆண்டு நிறைவு, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பகல் பதினோரு மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஹோட்டலுக்கு எதிரில் இருக்கும் பூங்கா வளாகத்தில் பகல் பன்னிரண்டு மணியிலிருந்து அன்னதானம் நடைபெறும். அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்ச்சியிலும் அன்னதானத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம் ".

தயாளன் மனைவியிடம் அதைக்காண்பித்து "பார்த்தாயா வேணி, ஒரு ஏழை சந்நியாசிக்கு ஒரு பிடி சோறு தரமறுத்த இந்த ஹோட்டல் இன்று அன்னதானம் நடத்தப்போகிறது. இது எல்லாமே ஹோட்டலின் வியாபாரத்தை பெருக்க ஒரு விளம்பரம் மற்றும் தந்திரம் தான்" என்றான். வேணி "எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. இந்த ஹோட்டல் கடந்த இரண்டு ஆண்டுகள் கூட, இதுபோன்ற அன்னதானங்களை கொடுத்தது. அப்போதெல்லாம் ஊரிலுள்ள பெரிய புள்ளிகளையும் பத்திரிகையாளர்களையும் கூட்டி வந்து அமர்க்களப்படுத்தினார்கள். இந்த முறை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை." என்றாள்.

முதலில் அந்த அன்னதானத்திற்கு தயாளன் செல்வதாக இல்லை.ஆனால் அவன் உள்மனம் அவனை அங்கு செல்லப் பணித்தது. இதை அவன் மனைவியிடம் சொல்ல அவளும் "சரி உங்களுக்குப் போகவேண்டும் என்றால், போய்தான் வரலாமே" என்றாள்.

ஞாயிறுகாலை பதினோரு மணி அளவில் இருவரும் புறப்பட்டு "உங்கள் ஹோட்டல்" சென்றனர். ஹோட்டலுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் மூன்று பேர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். முதலில் ஹோட்டல் முதலாளி பேசினார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு அவர் தனது ஹோட்டலின் சரக்கு மாஸ்டரை அழைத்துச் சிறிது நேரம் பேசச்சொன்னார். அவர் ஐந்து நிமிடங்கள் பேசினார். ஹோட்டலில் சுகாதார முறையில் எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாக அவர் உரையில் குறிப்பிட்டார். இதற்கு முன்பு ஹோட்டல் சரக்கு மாஸ்டர் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இருந்ததே கிடையாது.
இறுதியாக ஹோட்டல் முதலாளி மேடையில் வெள்ளை உடை அணிந்து அமர்ந்திருந்த ஒரு முதியவரை அழைத்து பேசச்சொன்னார். அவரை அறிமுகப்படுத்தியபோது "இந்த எளிய மனிதர் யார் என்பதை நான் அறியேன். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த மனிதர் என் கனவில் வந்து " இந்த முறை நீங்கள் அன்னதானம் செய்யும் முறை வித்தியாசமாக இருக்கும். நானும் அதில் பங்கு கொள்வேன் என்றார். அதைப்போலவே இன்று காலை பதினோரு மணிக்கு முன்பு அவர் இங்கு வந்தார். நான் உடனேயே அவரை அடையாளம் கண்டுகொண்டுவிட்டேன். நான் கனவில் கண்ட அதே முகம், ஆழ்ந்த கண்கள், வெள்ளை உடை, "ஐயா நீங்கள் தான் என் கனவில் வந்தீர்கள் என்றேன். அவரும் "ஆம், நான் கூறியபடி நிகழ்ச்சிக்கும் வந்துவிட்டேன்” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவர் யார் எங்கிருந்து வந்தார் என்பது கூட தெரியாது. இந்த அதிசய மனிதரை இப்போது சில வார்த்தைகள் கூற பணிவுடன் கோருகிறேன்" என்று பயபக்தியுடன் அந்த எளியவரை வரவேற்றார்.
அவரைப் பார்த்ததும் தயாளன் வியந்து போனான். பின்னர் மேடைக்கு மிக அருகாமையில் சென்று அவரை கவனித்தான். ஆம் , அதே எளிய சந்நியாசி தான், இப்போது கொஞ்சம் வித்தியாசமான உடையில் இருந்தார். அவரை அவன் உற்று நோக்கியபோது அவரும் ஒருமுறை தயாளனை கவனித்தார். கையை கொஞ்சம் உயரே தூக்கி அசைத்து , அவனைப் பார்த்து ஒரு சிறிய புன்முறுவல் பூத்தார். தயாளன் தூரத்திலிருந்தே இருகைகளையும் குவித்து அவருக்கு வணக்கம் தெரிவித்தான்.

அந்த சந்நியாசி பேசினார் "நான் ஒருமுறை இந்த ஹோட்டலுக்கு வந்து மிகவும் பசியுடன் ஒரு பிடி சோறு கேட்டபோது 'கிடையாது' என்று பதில் கிடைத்தது. ஆனால் ஹோட்டலைவிட்டு வெளியே வந்தபோது அன்பின் உருவில் வந்த ஒரு நல்ல மனிதர் எனக்கு வயிறு புடைக்க உணவை கொடுத்தார்-இந்த வார்த்தையைச் சொல்லுகையில், அந்த சந்நியாசியின் கண்கள் தயாளனை ஒருமுறை கூர்ந்து நோக்கியது- ஒரு சாதாரண மனிதர் இப்படி இருக்கையில் மக்களிடம் நல்ல வரவேற்ப்பையும் நல்ல லாபகரமாக இயங்கும் இந்த ஹோட்டல் நிறைய தர்ம காரியங்களைச்செய்யவேண்டும், குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு இலவச அன்னம் கொடுக்கவேண்டும். இதை அன்னதானம் தினத்தன்று மட்டுமே செய்யாமல், மற்ற நாட்களிலும் தினம் இருபது முப்பது ஏழைகளுக்கு இலவச உணவு பொட்டலங்களை வழங்கலாம் என்பது எனது அன்பான ஆலோசனை”.
“நான் இப்போது ஹோட்டல் முதலாளிக்கு விடும் அன்புக் கோரிக்கை ஒன்றுதான். வருடாவருடம் இவர்கள் செய்துவரும் அன்னதானத்தை இவர்கள் வருடத்தில் நான்கு முறை செய்யவேண்டும். அதுவும் நகரின் வெவ்வேறு ஏழைகள் நிறைந்து வாழும் பகுதிகளில்" என்று கூறி சந்நியாசி பேச்சை முடித்தவுடன் ஹோட்டல் முதலாளி "நிச்சயம் செய்வேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முந்நூறு ஏழைமக்களுக்கு அன்னதானம் செய்வோம். தவிர காலை மதியம் மற்றும் மாலை வேளைகளில் பசி என்று வரும் குறைந்தது இருபது ஏழை மனிதர்களுக்காவது இலவச உணவு பொட்டலங்கள் வழங்குவோம்." என்று கூறிவிட்டு "இப்போது அனைவரும் அன்னதானத்தில் பங்கெடுத்து இந்த அறிய எதிர்பார்க்கமுடியாத அதிசய விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அதிசயமனிதரை அன்னதானத்தை தொடங்கிவைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அந்த நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் அதிகமாகி பலரும் ஆச்சரியத்துடன் மேடையைச் சூழ்ந்து கொண்டனர். தயாளன் வேணியை ஓரிடத்தில் நிற்கச்சொல்லிவிட்டு கூட்டத்தில் நுழைந்து, அந்த எளிய சந்நியாசியை கண்டு ஓரிரு வார்த்தை பேசலாம் என்று சென்றபோது, அங்கே அவரைக் காணவில்லை. அவன் கண்ணுக்கு மட்டும் அல்ல எவர் கண்ணுக்கும் தென்படவில்லை. பலர் 'எங்கே அந்த அதிசய மனிதர்?" என்று பார்த்தனர். ஓட்டல் முதலாளியும் "எங்கே அந்த மனிதர். என்னுடன்தானே மேடையிலிருந்து இறங்கினார். இவ்வளவு வேகமாக அன்னதானம் வழங்கும் இடத்திற்கு என்னைவிட்டுவிட்டு தனியாக சென்றுவிட்டாரா" என்று வியப்புடன் அங்கும் இங்கும் நோக்கினார். அன்னதான கூடத்திலும் அவர் தென்படவில்லை.
பூங்காவிற்கு மனைவியுடன் சென்ற தயாளனுக்கு நடப்பவை பெரும் அதிசயங்களாக இருந்தது. வேணியும் பெருத்த வியப்புடன் "என்னாலேயே இதை நம்பமுடியவில்லை. மேடையில் வீற்றிருந்த அந்த எளிய மனிதரை நானும்தான் கவனித்தேன். திடீரென்று அவரைக்காணவில்லை என்பது நம்பமுடியாத அதிசயமாகவே இருக்கிறது' என்றாள்.
ஹோட்டல் முதலாளி பூங்காவிற்குள் வந்து "பொது மக்களே, நான் சில நிமிடங்கள் முன்பு மேடையில் பேசிய அந்த எளிய மனிதர்தான் முதன் முதலில் அன்னதானத்தை தொடக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நல்ல மனிதர் எங்கே மறைந்தார் என்பதே இப்போது எவருக்கும் தெரியவில்லை. என்னுடன்தான் மேடையிலிருந்து கீழே இறங்கினார். பொதுமக்கள் சிலர் அவர் அருகில் வந்து சூழ்ந்துகொண்டனர் . ஆனால் அவர்களால் அந்த மனிதரை பார்க்கமுடியவில்லை. என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. இப்போது நேரமாகிவிட்டதால், நீங்கள் அனைவரும் தயவுசெய்து வரிசையில் வாருங்கள். உங்கள் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்." என்று சொன்னவுடன் அன்னதானம் தொடங்கியது.
தயாளனும் கிரிஷ்ணவேணியும் அங்கே பரிமாறப்பட்ட அறுசுவை உணவினை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றனர். ஆனால் தயாளனின் மனம் மட்டும் " யார் அந்த மர்மமான மனிதர்? அவர் ஏன் இப்படிச் செய்யவேண்டும்?" என்றெல்லாம் நினைத்துக்கொண்டான்.
இரண்டு நாட்களுக்குப்பிறகு தயாளன் 'உங்கள் ஹோட்டல்' சென்று அன்னதான விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கல்லாப்பெட்டியிலிருந்தவர் "இதோ சில புகைப்படங்கள்" என்று காண்பித்தார். தயாளன் அந்த புகைப்படங்களை பார்த்து மேலும் ஆச்சரியம் அடைந்தான். அந்த புகைப்படங்களில் எதிலும் அந்த எளிய மனிதர் தென்படவில்லை.அவன் வியந்துபோய் கேட்டான் "இந்த புகைப்படங்கள் எதிலுமே அன்று மேடையில் இறுதியாகப் பேசிய அந்த வெள்ளை உடை மனிதரைக் காணவில்லையே?".
கல்லாப்பெட்டி மனிதர் கூறினார் "நீங்கள் பார்த்த சில புகைப்படங்களை நன்கு கவனியுங்கள். என் தந்தை மற்றும் இந்த ஹோட்டலில் சரக்குமாஸ்டர் இவர்கள் நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றில் மூன்றாவது நாற்காலி மட்டும் தெரிகிறது. ஆனால் அதில் அமர்ந்திருந்த அந்த மனிதரின் முகமோ உடம்போ கண்ணனுக்குத் தெரியவில்லை" இதை கேட்டுவிட்டு தயாளனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது போல இருந்தது.
அவனை அறியாமலேயே தயாளன் "இந்த மர்ம மனிதரை நான் மூன்று வாரங்களுக்கு முன்பு உங்கள் ஹோட்டலின் வெளியே சந்தித்தேன்" என்று சொல்லிவிட்டு, அன்று அவன் அவருக்கு உணவு கொடுத்தது அவர் தனக்கு ஏற்பட்ட அன்றைய அனுபவங்களைத் தன்னிடம் கூறியதையும் அந்த கல்லாப்பெட்டி மனிதரிடம் தயாளன் பகிர்ந்து கொண்டான்.

இதை கேட்டுவிட்டு அந்த மனிதர் "அன்று நான்தான் அவருக்கு ஒரு பிடி உணவு கூட அளிக்காமல் அவரை மிகவும் மரியாதை இல்லாமல் இகழ்ந்து பேசினேன். அன்று இரவு எனக்கு கடுமையான வயிற்றுவலி. எதை சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தேன். என் தந்தை பல மருத்துவர்களிடம் என்னை கூட்டிச்சென்றார். எனக்குத் தோன்றியது "நான் இந்த மனிதரை இவ்வாறு இகழ்ந்து பேசியதால்தான் இவ்வவாறு நான் வயிற்று வழியால் அவதிப்படுகிறேன்" என்று. இதை நான் என் தந்தையிடம் தெரிவித்தேன். அவர் பதறிப்போய் "ஏன் நீ அவரிடம் அப்படி நடந்து கொண்டாய்"என்று கேட்டார். நான் கூறினேன் "அப்பா, என் மனைவி என்னைவிட்டு வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள். இதை நான் உங்களுக்கு தெரிவிக்கவில்லை. இந்த வேதனையான மனநிலையில் நான் அன்று இருந்ததால் அந்த மனிதரிடம் கொஞ்சம் மரியாதையின்றி பேசிவிட்டேன். நான் செய்த அந்த ஈனச்செயலுக்கு வருந்துகிறேன்" என்றவுடன் என் அப்பா " உன் நிலமையைக்கண்டு நான் வருந்துகிறேன். இருப்பினும் நீ மனம் தளராதே. நீ அந்த மனிதரிடம் பேசியதற்கு மாறாக நாம் ஒரு அன்னதானம் செய்துவிடுவோம். நீ இன்றிலிருந்து தினமும் காலை மாலை அந்த மனிதரை மானசீகமாக நினைத்து அவரிடம் மன்னிப்பு கேள்." என்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்தே என் வயிற்றுவலி குறைய ஆரம்பித்தது. அன்னதானம் நடந்த நாளில் நான் காலை ஆஸ்பத்திரியில் இருந்ததால் விழாவிற்கு வரமுடியவில்லை. ஆனால் அன்று மதியம் அன்னதானம் முடிந்தபிறகு எனக்கு பூரண குணம் கிடைத்தது. இப்போதுவரை எனக்கு வயிற்றில் வலி ஏதும் இல்லை.' என்றபோது தயாளனுக்கு நம்பவே முடியவில்லை.

அடுத்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை மாலை தயாளனும் கிருஷ்ணவேணியும் வடலூர் புறப்பட்டுச்சென்றனர். தயாளன் அவர்கள் வருவதைப்பற்றி குணசீலனுக்கு முன்பே தெரிவித்துவிட்டான். எனவே அவர்கள் மேட்டுக்குப்பம் சேர்ந்தபோது குணசீலனும் வேறு சிலரும் அவர்களை வரவேற்றனர். சிறிது நேரம் அவர்கள் உரையாடினார். தயாளன் சந்நியாசியுடன் ஏற்பட்ட அனுபவங்களை விரிவாகபகிர்ந்துகொண்டான். அவற்றை கேட்டுவிட்டு குணசீலன் அதிகமாக வியக்கவில்லையெனினும் புன்முறுவல் பூத்தவாறு "இப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு மட்டும் இல்லை, குறைந்தது பதினைந்து பேர்களுக்கும் நடந்துள்ளது." என்று சொல்லிவிட்டு அந்த தம்பதியினருக்கு விருந்தோம்பல் உபசாரம் செய்தார்.
பின்னர் வள்ளலார் திவ்யஜோதியான அறை அதையொட்டியுள்ள சன்மார்க்க வளாகத்தையும் அவர்கள் கண்டு களிப்புற்று மகிழ்ந்தனர். அங்கே தயாளன் ஒருமணி நேரம் தியான நிலையில் அமர்ந்தான். அவர்கள் இருவரும் தங்க ஒரு தனியறை கொடுக்கப்பட்டது. இரவு சிறிது பழங்கள் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ஓய்வெடுத்தனர்.

அடுத்தநாள் அவர்கள் காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு சன்மார்க்க வளாகத்திற்கு சென்று மீண்டும் தியான நிலையில் இருந்தனர். அதன் பின்னர் குணசீலன் அங்கே வந்து அவர்களை சந்தித்தார். அப்போது தயாளன் வள்ளலார் பெருமான் குறித்த சில புத்தகங்களை அங்குள்ள புத்தகநிலையத்தில் வாங்கிக்கொண்டான். பிறகு அங்கு சிலர் வந்து அமர்ந்து திருவருட்பா பாடல்களை பாடினார்கள். அதன் பின்னர் மேடை மீது சிலர் வந்து அமர்ந்தனர். குணசீலன் அவர்களை வளாகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் தயாளன் கவனித்தான், மேடையில் இருந்த பத்து நபர்களில் ஒருவர் 'உங்கள் ஹோட்டல் ' முதலாளியின் மகன். அந்த முதலாளியின் பெயர் வெங்கடாசலம் அவர் மகனின் பெயர் தணிகாசலம் என்றும் தெரியவந்தது.

மேடையில் அமர்ந்திருந்த ஐந்து பெண்மணிகள் ஒருவர் பின் ஒருவராக அவர்களின் சில அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொரு பெண்மணியும் இரண்டு மாதங்களுக்கு முன்பு தம் வீட்டிற்கு ஒரு எளிய சந்நியாசி வந்த அனுபவத்தை குறிப்பிட்டனர். சந்நியாசி வந்த தேதி கிழமை அவருக்கு உணவு கொடுக்காமல் ஒவ்வொரு பெண்மணியும் செய்த செயல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த நாளில் அதே தேதியில்தான் அந்த சந்நியாசி 'உங்கள் ஹோட்டல்' சென்று அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த தணிகாசலத்தால் நிந்திக்கப்பட்டார் என்பதையும், அந்த சந்நியாசியை மேற்குறிப்பிட்ட சம்பவங்களை தன்னிடம் குறிப்பிடத்தையும் தயாளன் நன்கு அறிவான்.

அற்புதம் என்னவென்றால் மேடையில் பேசிய ஐந்து பெண்மணிகளும் அவர்களின் கணவர்களுடன் வந்திருந்தார்கள். ஒவ்வொரு பெண்மணியும் அவர்களின் மாதாந்திர குடும்ப வருமானத்திலிருந்து இருபது சதவிகிதம் அன்னதானத்திற்கு கொடுப்பதாக அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

அதன் பிறகு சிறிது நேரம் வள்ளாளர்களின் சில பாடல்கள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர் அனைவர்க்கும் அந்த வளாகத்தில் உணவு வழங்கப்பட்டது. அங்குதான் 'அணையா அடுப்பு' என்கிற அன்பின் தத்துவத்தில் அமைந்த கருத்தின் அடிப்படையில் இடைவிடாமல் அன்னம் செய்து அங்கு வருகிற ஏழைஎளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டுவருகிறது. உணவு முடிந்தபின் தயாளன் அவன் மனைவியுடன் சேர்ந்து அந்த ஐந்து பெண்மணிகளையும் அவர்களின் கணவர்களையும் அழைத்துவைத்து சிறிது நேரம் அவர்களுடன் பேசினான். தான் எப்படி அந்த சந்நியாசியை கண்டேன் என்பதையும் மீண்டும் அவரை அன்று 'உங்கள் ஹோட்டல்' அன்னதானது விழாவில் மேடையில் பார்த்ததையும் பின்னர் அவர் மர்மமாக மறைந்துவிட்டதையும் அந்த சந்நியாசி அந்த பெண்களைப்பற்றி தன்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களையும் தெரிவித்தபோது அவர்கள் அனைவரும் மிகவும் பிரமித்துபோனார்கள். இன்னொரு புறம் மிகவும் நாணி வெட்கி தலைகுனிந்தார்கள். பின்னர் எப்படி அவர்களது கணவர்களின் கனவில் அதே சந்நியாசி தோன்றி அவர்களை இவ்விதம் ஒன்றிணைத்து வடலூருக்கு வரவழைத்திருக்கிறார் என்பதை அவர்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் தயாளனுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதுவரையில் புலால் உண்ணும் பழக்கம் கொண்ட தயாளன் தம்பதியினர் அன்றுமுதல் புலால் உண்ணுவதை நிறுத்திவிட்டு சைவ உணவு எடுக்கப்போவதாக உறுதிமொழி கூறினார்கள். இதை கேட்டுவிட்டு அந்த ஐந்து பெண்மணிகள் அவரவர் கணவர்களுடன் தனியே சென்று சிறிது நேரம் உரையாடிவிட்டு மீண்டும் வந்தனர். அப்போது அங்கே வந்த குணசீலன் மிகவும் ஆச்சரியம் கொள்ளும் வகையில் அவர்கள் அனைவரும் "திரு தயாளன் தம்பதியைப்போல நாங்களும் இன்றிலிருந்து புலால் உண்ணுவதை நிறுத்திவிடுகிறோம்" என்று ஒரே குரலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குணசீலன் கூறினார் "நீங்கள் இதுபோல மாறிவிடுவீர்கள் என்று வள்ளலார் பெருமானுக்கு தெரிந்துதான் உங்களை இந்த மேடைக்கு அவர் அழைத்துவந்திருக்கிறார். இந்த மேடைமீது பேசும் ஒவ்வொருவரும் ஏற்கெனவே சைவம் உண்பவர்களாக இருப்பார்கள் அல்லது இந்த மேடை ஏறிப் பேசியவுடன் சுத்த சைவத்திற்கு மாறிவிடுகிறார்கள்" என்று சொன்னபோது அனைவரும் வியந்து போனார்கள்.

அந்த நேரத்தில் தயாளன் குணசீலனிடம் கூறினான் "ஐயா, நானும் இனிமேல் என் மாத வருவாயிலிருந்து முப்பது சதவிகிதம் ஏழைகளின் அன்னதானத்திற்கு கொடுப்பேன். அதுமட்டும் இல்லை, வருடத்தில் குறைந்தது நான்கு முறையாவது வடலூருக்கு வந்து இந்த மேட்டுக்குப்பம் வளாகத்தில் சுத்தசன்மார்க சங்க வழிபாட்டில் கலந்துகொள்வேன்" என்றபோது அங்கே இருந்த அனைவருமே "நாங்களும் இனி அடிக்கடி இங்கே வந்து செல்வோம். எங்களுக்கு இந்த அன்புவழியை மிகவும் அற்புதமாக வகுத்துக்கொடுத்த சந்நியாசியாக வந்த வள்ளலார் பெருமானுக்கு எங்களது தாழ்மையான வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.

அடுத்த நாள் காலையில் தயாளனும் கிருஷ்ணவேணியும் சென்னை புறப்பட்டனர். இரண்டு வாரங்கள் கடந்தது. ஒரு நாள் மாலை தயாளன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது கிருஷ்ணவேணி "இன்று நான் இரண்டு முறை வாந்தி எடுத்தேன். வயிறு ஒருமாதிரி இருக்கிறது" என்றாள். உடனே அவள் கொடுத்த காபியை குடித்துவிட்டு தயாளன் மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான். அவளைப் பரிசோதனை செய்த பெண் மருத்துவர், சிரித்த முகத்துடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தபோது, திருமணம் ஆகி எட்டுஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த தயாளன் தம்பதிகளின் முகம் ஆயிரம் வாட்ஸ் விளக்குப்போல மலர்ந்தது. மருத்துவமனையிலிருந்து கிளம்புகையில், ஒருவர் மருத்துவமனை உள்ளே நுழைந்ததைப்பார்த்த தயாளன் கிட்டத்தட்ட மயக்கமே அடைந்துவிட்டான். உள்ளே நுழைந்தது அந்த சந்நியாசிதான். உடனே சுதாகரித்துக்கொண்டு தயாளன் மருத்துவமனை உள்ளே மீண்டும் நுழைந்தான், அவரைத்தேடி. அந்த சந்நியாசி என்ன அவ்வளவு எளிதாக அவன் கண்ணுக்குத் மீண்டும் தெரிவாரா என்ன? அப்படி எந்த ஒரு மனிதரும் உள்ளே வரவில்லை என்று மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறினார்கள். ஏன், கிருஷ்ணவேணி கண்களுக்கும் அந்த சந்நியாசி தெரியவில்லை. அப்போது அவனுக்கு கண்ணில் பட்ட சந்நியாசி இனி அவன் வாழ்க்கையில் எப்போதும் காட்சி அளிக்கமாட்டார் என்பதை தயாளன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அடுத்து ஒவ்வொரு முறையும் தயாளன் வடலூர் சென்றபோது பலர் தமக்கு ஏற்பட்ட வியப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். முதன் முதலில் வடலூரில் கண்ட ஐந்து பெண்மணிகளும் அங்கே மீண்டும் வந்தபோது, ஒவ்வொரு முறை அவர்களின் குடும்பத்தில் விடைகாண முடியாத சில இன்னல்களும் பிரச்சினைகளும், அவர்கள் வள்ளலாரின் வழிப்படி நடக்கையில் எப்படித் தீர்ந்தது என்பதை பகிர்ந்தபோது தயாளன் வள்ளலாரின் நினைப்பில் கருணை மழையில் பூரிப்படைந்தான்.

ஆனால் ஒன்றுமட்டும் தயாளனுக்கு உறுதியாக விளங்கியது. கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் சாதி சமயம் இனம் குலம் போன்ற பேதங்களற்ற, ஈவிரக்கமும் கருணையும்தான் உண்மையான மனித நேயம், மெய்யான அன்பு. அப்படிப்பட்ட அந்த அன்பின் உருவம்தான் இறைவன். அவன் ஒவ்வொரு உயிரிலும் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கிறான். தூய அன்பின் வழியில் நடப்பில் அத்தகைய தெய்வத்தன்மையை ஒவ்வொரு மனிதனும் தன்னுள் உணரமுடியும்.

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Feb-23, 8:47 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 153

மேலே