தண்வயலூரன் மீது ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் – நாலடியார் 389

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

சா’ய்’ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன், - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான் 389

- கற்புடை மகளிர், நாலடியார்

பொருளுரை:

கோரைகளைப் பறித்து விடுதலால் நீர் நன்கு விளங்கித் தெரிகின்ற குளிர்ந்த வயல்களை உடைய ஊரனாகிய என்தலைவன் மேல் முன்னெல்லாம் ஓர் ஈ வந்து உட்கார அது பொறாமல் வருந்தியவளும் யானே; தீப்பொறி பறக்கப் பரத்தையர் தம் கொங்கைகளால் உராய அழுந்திக் (ஞெமுக்கிக்) கலவி செய்த, குளிர்ந்த சந்தனமணிந்த அவனது அகன்ற மார்பினை இப்போது பார்த்துப் பொறுத்திருந்தவளும் யானே காண்.

கருத்து:

கற்புடைய மகளிர்க்குத் தங்கணவரிடம் அன்பு எந்நிலையிலும் குன்றாது.

விளக்கம்:

களைகளாகிய கோரைகளைப் பறித்துவிட நீர் நன்கு விளங்கித் தெரிதல் போல, பரத்தையிற் பிரிவென்னுந் தலைவனது குறையொன்றனைக் கருதாது விட, அவன் நலங்கள் நன்கு விளங்கிப் பெரிதும் இன்பஞ் செய்கின்றனவாதலின், அந்நலங்களால் யான் கவரப்பட்டுப் பொறுப்பேன் ஆயினேன் என்பது தலைவியின் விடை; புலவாது நின்றனை யென்ற தோழிக்குத் தலைவி கூறியது இது!

"ஊடியிருப்பினும் ஊரன் நறுமேனி கூடல் இனிதாம் எனக்கு" 1 ஐந்திணை ஐம்பதினும் இது வரும்;

முன்னே பொறாதிருந்தேன் என்றமையின், மன் கழிவுப் பொருளினின்றது; ‘தண்சாந் தணியகல' மென்னுங் குறிப்பால் தலைவன் நலங்கள் பைய வெளிப்படும்.பின் வந்த யான் என்பதற்கும் ஏகாரங் கொள்க;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-23, 1:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே