கரும்பின் கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு – நாலடியார் 390

நேரிசை வெண்பா

அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்(கு) அதனால்
இடைக்கண் அனையார்க்(கு) உரை. 390

- கற்புடை மகளிர், நாலடியார்

பொருளுரை:

அரும்புகள் போதாகி மலரும் மாலையை யணிந்த எம்தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றனன் என்று பெரியதொரு பொய்ம்மொழியை, பாண! எம்மிடம் மொழியாதே; ஊரனாகிய எம் தலைவர்க்கு யாம் கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவை இலேமாயிருக்கின்றனம் ஆதலின் அதன் நடுக் கணுக்களையொப்ப அவற்குச் சுவை மிக உடையரான பரத்தையரிடம் அதனைச் சொல்!

கருத்து:

கற்புடை மகளிர், கணவன் வருகையில் அன்புடையராய் இருப்பர்.

விளக்கம்:

தலைவன் வருகை தனக்குப் பொய்யெனவே பரத்தையர்க்கு மெய்யாதல் பெறப்படுதலின், ‘இடைக்கண் அனையார்க்கு உரை'யென்றாள். ‘பொய்யுரையாதி' யென்னுங் குறிப்பால், அவன் அருளுதல் மெய்யாதல் வேண்டுமென்னும் தலைவியின் வேட்கை பெறப்படும்; கண்ணென்றது கணு.கரும்பின் நுனி இடைப்பகுதிகளின் சுவையியல்பு முன்னும் வந்தது.1 இவை நான்கு பாட்டானும் கணவன் தவறுடையான் ஆயினும் தாம் பொறுமையுடையராய் அன்பின் நீங்காது தமது புலத்தலால் அவனைத் திருத்தி ஏற்றுக்கோடல் ஆகிய கற்புடை மகளிரது மற்றொரு கடமையும் நுவலப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-23, 3:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே