நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல் - பழமொழி நானூறு 290
இன்னிசை வெண்பா
அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து) அறிகலர் ஆகிச் சிதைத்தெழுப
கல்லாக் கயவர் இயல்போல் நரியிற்கூண்
நல்யாண்டும் தீயாண்டும் இல். 290
- பழமொழி நானூறு
பொருளுரை:
கீழ்மக்கள் வறுமையுற்ற இடத்து அது காரணமாகத் தீமையைச் செய்து உண்பார்கள்; செல்வம் உற்ற இடத்து செல்லும் நன்னெறியை அறியாதவர்களாகி அறத்தைக் கெடுத்து ஒழுகுவார்;
கல்லாத கீழ் மக்களுக்கு நன்மை என்பதில்லாதது போல, நரியினுக்கு உணவு பெறுகின்ற நல்ல காலமும், பெறாத பஞ்ச காலமும் இல்லை.
கருத்து:
கல்வி அறிவில்லாத கயவர்கள் எக்காலமும் தீமையையே புரிந்து ஒழுகுவார்கள்.
விளக்கம்:
கல்லாக் கயவர் இயல்போல் என்றாரேனும், நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்லாத இயல்போலும் கல்லாக் கயவர் இயல் என்பது பொருளாகக் கொள்க.
நரிக்கு உணவுப் பஞ்சம் இல்லாதது போல, கயவருக்குத் தீமை செய்வதில் பஞ்சமில்லையாம்;. கயவர் நற்குணங்கள் ஒருசிறிதும் இல்லாதவர்.
'நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்' என்பது பழமொழி.