சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித் திறத்தின் உரைப்பார் - பழமொழி நானூறு 295
இன்னிசை வெண்பா
சிறப்புடை மன்னவரைச் செவ்வியின் நோக்கித்
திறத்தின் உரைப்பார்க்கொன் றாகாத தில்லை
விறற்புகழ் மன்னர்க் குயிரன்ன ரேனும்
புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன். 295
- பழமொழி நானூறு
பொருளுரை:
மிகுந்த புகழினையுடைய அரசரின் உயிர்க்கு ஒப்பானவரே ஆனாலும் வெளியிலுள்ள அமைச்சர்களை விட, அரண்மனையின் உள்ளே பணி செய்யும் பணியாளர்க்குச் சந்தர்ப்பம் வாய்ப்பது எளிது.
ஆதலால், எல்லாச் சிறப்புமுடைய அரசர்களை கண்டு பேசுவதற்குரிய காலத்தை அறிந்து தக்க சமயத்தில் திறம்படக் கூறுவார்க்கு தாம் நினைத்ததை அடைய முடியாதது ஒன்றுமில்லை.
கருத்து:
அரசனை சார்ந்தொழுகுவார் அரசனுடைய குறிப்பறிந்து கூறிக் காரியங்களை சாதகமாகச் செய்து கொள்ள வேண்டும்.
விளக்கம்:
மேல் கீழோரிடத்து உரைத்துக் காரியங் கொள்ளற்க என்றலின், அரசனுடைய குறிப்பறிந்து கூறி முடித்துக்கோடல் நல்லது என்றது இது.
கூன் - கோயிலினுள் ஏவல் செய்வார். இவர்க்குச் செவ்வி மிக வாய்க்கும்;அமைச்சர்க்குச் செவ்வி பெறுதல் அரிதாம். அஃதறிந்து உரைப்பாரைப் பெறின் முடியாதது ஒன்றில்லை என்பதாம்.
வலிமை யெனப்படும் விறல் என்பது அதனது மிகுதி உணர்த்திநின்றது.
'புறத்தமைச்சின் நன்றகத்துக்கூன்' என்பது பழமொழி