236 மயக்கும் பொருளால் விரைவில் மாளுவர் – மது அருந்துவதன் விளைவு 11

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

அரக்கும் அரக்கு மதுகஞ்சம்
..ஆதி யாக வறியாமை
சுரக்குஞ் சரக்கைச் செய்த’ல்’விற்றல்
..துணிந்து கொள்ளல் நுகர்தலெலாம்
பரக்கும் பழியைப் பாவத்தைப்
..பயக்கு மத்தீத் தொழிற்கிசைவோர்க்(கு)
இரக்குந் தொழிலும் ஆயுள்குறைந்(து)
..இறக்குந் தொழிலு மெய்துமால். 11

– மது அருந்துவதன் விளைவு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை

”குடிப் பொருட்களாகிய சாராயம், கள், கஞ்சா முதலியன குடிப்பவர்களுக்கு அறிவுக் குறைபாடு பெருகும்.

அத்தகைய பொருட்களைத் தயாரிப்பது, விற்பது, பழிக்கஞ்சாது துணிந்து வாங்குவது, உபயோகித்து அனுபவிப்பது எல்லாம் பெரும் பழி பாவத்தை உண்டாக்கும்.

இத்தகைய தீமையை ஏற்படுத்தும் தொழிலை விரும்பிச் செய்பவர்களுக்கு வறுமையினால் பிச்சை எடுக்கும் நிலையடைந்து, ஆயுளும் குறைந்து விரைவில் மரணமடைய நேரும்” என்று போதைப் பொருட்களை அனுபவிப்பதும், தயாரித்துத் தொழில் செய்வதும் பொருளாதார சிக்கலும், சட்டச் சிக்கலும் ஏற்பட்டு, ஆயுள் குறைந்து மாண்டு விடுவர் என இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.

அரக்கும் - குடிக்கும். அரக்கு – சாராயம் (arrack), மது - கள். கஞ்சம் - கஞ்சா.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-23, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே