புடைத்தக்கால் வெண்மாத் தலைகீழாக் காதி விடல் - பழமொழி நானூறு 300

நேரிசை வெண்பா

குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து
நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் வெண்மாத்
தலைகீழாக் காதி விடல். 300

- பழமொழி நானூறு

பொருளுரை:

குலத்தினால் சிறியவர்கள் (பிறரிடம் கொண்ட) பகைமையை நீக்கும்பொருட்டு இடைப்புகுந்து விலக்குவாரிடத்தும் சினந்து எழுதல், அவ்விடத்தில் நிற்கின்ற நிலை நீங்கும் பொருட்டு (சாட்டையால்) அடித்தவிடத்து வெள்ளிய குதிரையானது சவாரி செய்யத் தெரியாதவனைத் தலைகீழாகத் தள்ளித் துன்புறுத்துவதோ டொக்கும்.

கருத்து:

கீழ்மக்கள் தமக்கு நன்மை செய்வோரிடத்திலும் வெகுண்டு எழுவார்கள்.

விளக்கம்:

தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்களாதலின், இவர் நமக்குச் செய்வன நன்மை தீமை என்பன பகுத்துணரும் அறிவு இலதாயிற்று.

ஆதலின், இடைநின்று விலக்குவார்மேல் சினங்கொள்வார் தாழ்ந்த குடியிற் பிறந்தவர்களாதலின், அவர்களது இயற்கை கலாம் விளைத்தலே யாகும்.

அவர்களது குலத்தின் இயற்கையாகி கலாம் விளைத்தலை யாரேனும் இடை நின்று விலக்குவாராயின்,அவரைச் சினத்தலும் அவரது இயற்கையேயாம் என்று கூறினும்ஆம்.

'நிலத்து நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் வெண்மாத் தலைகீழாக் காதிவிடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-23, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே