243 கவலை தருவதால் சூதுக்கு கவறு எனும் பேர் காரணப் பெயர் – சூது 7

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

இவற லேதந் திழிவையுந் தந்துபின்
தவறு யாவையுந் தந்துநெஞ் சந்தனைக்
கவறென் னேவிக் கலக்கங் கொடுத்தலாற்
கவறெ னும்பெயர் காரண நாமமே!.7

- சூது, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை

”பேராசையைத் தந்து, இழிவையும் கொடுத்து அதன்பின் குற்றங்கள் அனைத்தையும் தந்து, மனத்தைக் கவலை கொள்ளும்படி தூண்டி நீங்காத கலக்கத்தைக் கொடுப்பதால் சூதாட்டத்திற்குக் ’கவலை’ என்ற பொருள் தரும் ’கவறு’ என்ற சொல் காரணப் பெயரேயாகும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

இவறல் - பேராசை. கவறு - கவலை கொள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-23, 7:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே