கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் - பழமொழி நானூறு 331
இன்னிசை வெண்பா
கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்துமேற் கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல் என்னுண்டாம் மாணிழாய்! கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல். 331
- பழமொழி நானூறு
பொருளுரை:
மாட்சிமைப்பட்ட அணிகலன்களை உடையாய்! மயக்கந்தரும் கள்ளினைக் குடித்து சோம்பி அடங்கியிருப்பார் ஒருவருமிலர்;
ஆதலால், கொடி அசைகின்ற வலிய தேரினை உடைய அரசர்களது பொருளை உண்டு உயிர் வாழ்பவர்கள், ஒரு செயலை மனத்தில் நினைத்தலை மேற்கொண்டு அவ்வரசர் ஏவிய ஆணையை சோம்பல் கொண்டு விரைந்து செய்யாதொழிதலால் என்ன பயன் உண்டாம்?
கருத்து:
அரசன் ஆணையை உடனேயே அவன்கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும்.
விளக்கம்:
கூட்டு என்றது அரசனால் சுங்கம் முதலிய பல வழியானும் கடைக்கூட்டப்பட்ட பொருள்.
ஏவிய - ஏய. கள்ளைக் குடித்தார் அடக்கமாக ஓர் இடத்தில் சோம்பி இருத்தல் இலர்;
அதுபோல், அரசனது பொருளைக் கொண்டு உண்டு வாழ்பவர்கள் அவன் ஏவிய தொன்றனைச் செய்யாது சோம்பியிருத்தலும் இல்லையாதல் வேண்டும். 'மடித்தொழிதல் என்னுண்டாம்' என்றது, விரைந்து கருமத்தை முடிப்பின் அதனால் வரும் பெரும் பயன் நோக்கி.
கள்ளைக் குடித்தவனுக்கு ஐம்பொறியும் சோம்பலின்றி விரைந்து நின்று செய்தல் இயற்கையாதல் போல, அரசனது பொருளை உண்பவனும் அவனது கருமத்தை விரைந்து நின்று முடித்தல் வேண்டும். அரசனால் ஏவப்பட்ட செயல் முடிவுறாது எஞ்ஞான்றும் சொல்லாதாகலின், 'மடித்து ஒழிதல்' என்றதற்குச் சோம்பல் கொண்டு விரைந்து செய்யா தொழிதல் என்று பொருள் கூறப்பட்டது.
'கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்' என்பது பழமொழி.