சொப்பன வீதியில் நடப்பவன்

சொப்பன வீதியில் நடப்பவன்
***** ***** ***** ***** *****
வெற்றியின் வித்தினை வேர்விட விட்டவன்
வெண்பனிப் பூவென விரிவான்
முற்றிலும் தன்மன மெட்டிடு மாணவ
மத்தனை யும்மழித் திடுவான்
சுற்றிடும் செக்கிடைச் சிக்கிய மாடெனச்
சுற்றுவ தற்கவன் நினையான்
சிற்றெறும் பிற்கவன் சிற்சில யோசனை
செப்பிட நுண்ணறிந் திடுவான்
*
புற்றிடை வாழ்ந்திடும் பாம்பெனக் கொட்டிடும்
புத்தியி லாதரை வெறுப்பான்
கற்றதை மற்றவர்க் கீவதி லக்கறைக்
காட்டிடும் நற்குணம் படைப்பான்
குற்றுயி ராகுதற் கொப்புறு மெம்மொழி
கொற்றவை யேறிட முனைவான்
தற்குறி யாகுவ தற்கினி யேவழி
தானிலை யேயென மொழிவான்
*
அற்புத மென்கிற அத்தனை யாற்றலும்
அற்புதப் பட்டிடற் கலைவான்
விற்பனைக் கெட்டிய விலைபொருள் யாவிலும்
விரவிய நச்சினை யழிப்பான்
உற்றவர் மற்றவர் உற்றதை நோக்கிட
உத்தம மாயதை யளிப்பான்
சொற்களி லுள்ளதைச் செய்கையிற் காட்டிடுஞ்
சொப்பன வீதியில் நடப்பான்
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-May-23, 2:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 54

மேலே