பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்- பழமொழி நானூறு 334
நேரிசை வெண்பா
விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின்(று) என்றனைத்தும் தூக்கி - விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட! என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.334
- பழமொழி நானூறு
பொருளுரை:
மலைநாட்டை உடையவனே! விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலைப்பணம் கொடுத்துக் கொள்வது விளக்கினால் பொருள் வேறுபாடு இல்லை என்று விளக்கின் தன்மை முழுமையும் ஆராய்ந்தேயாகும்;
விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்யின் பொருள்கொடுத்துப் பெற்ற அதனால் அவர்க்கு வரும் பயன் யாது? ஆதலால், பொருளைக் கொடுத்து இருளைக் கொள்ளார்.
கருத்து:
ஞானநூல்களைக் கற்றல் வேண்டும்.
விளக்கம்:
விளக்கு - உண்மை நிலையை விளக்கிக் காட்டுதலின் இப்பெயர் பெற்றது. துளக்கம் - அசைவு; அஃதாவது பொருள் நிலைவேறுபாடு.
'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'
என்ற புறநானூற்று அடிகளும் ‘ஆசிரியனை வழிபட்டுப் பொருள் கொடுத்துக் கற்றல் நன்று' என்பதை வலியுறுத்துகின்றன. குறித்தபொருள் மறைந்து நிற்க வேறுபொருள் கூறப்பட்டமையின் இச் செய்யுள் ஒட்டு அணியைச் சேர்ந்ததாகும். விளக்கு என்றமையால் பிறப்பின் தன்மையை விளக்கக் கூடிய ஞான நூல் குறித்த பொருளாகக் கொள்ளப்பட்டது.
'பொருளைக் கொடுத்து இருளைக் கொள்ளார்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.