கற்பென்பதென்ன.?
கவி தொடா காதலும்
காதல் தொடா கவியும்
தாய்மை காணாப் பெண்மையும்
காதல் இலாக் கலவியும்
மொத்தமும் பாழென்றுரைத்தாள்
கன்னியொருத்தி..
நெடுங்காலம்
எம் சிந்தைதனில்
வீற்றிருக்கும்
கேள்வியிது..
கற்பென்பதென்ன?
விடை பகர்வாய் தோழியென்றேன்.
உயிரனைய காதலும்
உயிருருகும் காமமும்
ஒருவனுக்கே உரித்தாயின்
அதுவன்றோ கற்பென்றாள்.
கற்பென்னும் சாத்திரம்
விளங்கவில்லையெனக்கு..
கற்பொக்கும்
கண்ணகிக்கும்
மாதவிக்கும்
என்றிருக்க
கோவலனின் குற்றமென்ன?
கண்ணகியின் காற்சிலம்பா..?
மணிமேகலையா..?
கற்பென்னும் கோட்பாட்டில்
ஆணுக்கு விதிவிலக்கா..?
ஆண் வகுத்த
வேதமிது..
பெண்ணினத்தின் சாபமிது
கற்பளந்த கண்ணகிக்கும்
விளங்காத கூற்றிது..
இன்றுவரை
விடைதேடும்
கேள்வியிதென்று
வினாவிற்கான
விடையாய்
வினாக்களைத்
தந்து சென்றாள்
அந்த பெயர் தெரியா
கற்பரசி.....!